நாவலப்பிட்டி, பரகல கீழ் பிரிவு தோட்டப் பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிந்து விழுந்த அனர்த்தத்தில், அத்தோட்டத்தைச் சேர்ந்த 65 குடும்பங்களைச் சேர்ந்த 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தற்போது தற்காலிகமாக உடஹேன்தென்ன கிரேஹெட் இலக்கம் 01 தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் லயன் குடியிருப்பைச் சேர்ந்த 13 வீடுகள் முழுமையாக மண்ணில் புதையுண்டுள்ளன.
மண்மேடு சரிந்து விழுந்த பகுதி
கற்பாறைகள் மற்றும் மண்மேடு சரிந்து விழுந்த பகுதியில் இருந்து இதுவரையிலும் 08 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்றைய தினமும் (02) ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளதோடு, மேலும் 05 பேரைக் காணவில்லை எனவும், இவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குருந்துவத்தை தெரிவிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட சடலங்கள் மண்சரிவு ஏற்பட்ட பகுதியின் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இந்த விபத்தின் காரணமாகத் தமது உடமைகள் அனைத்தும் மண்ணில் புதையுண்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, மண்ணில் புதையுண்டவர்களை மீட்பதற்கு இராணுவத்தினரோ அல்லது காவல்துறையினரோ குறித்த பகுதிக்கு வரவில்லை எனவும், கடந்த இரண்டு நாட்களாக மக்களே தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
