வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்காக இனமதபேதமின்றி அனைவரும் ஒன்றுசேர்ந்து குரல்கொடுக்க வேண்டும் என இலங்கை மனித உரிமை
ஆணைக்குழுவின் அம்பாறை – மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான இணைப்பாளர்
ஏ.எல்.இஸ்ஸடீன் தெரிவித்துள்ளார்.
சிவில் அமையத்தின் இணைப்பாளர் ஜே.கோபிநாத் தலைமையில்
மட்டக்களப்பு மியாணி மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“மக்கள் தமது உறவுகளுக்காக நினைவேந்தல்கள் செய்யும் சந்தர்ப்பத்தில்
அவர்கள் அழுத்தங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகுவார்களாகயிருந்தால்
அவர்களின் அடிப்படையுரிமை மீறப்படுகின்றது. ஆகவே சுதந்திரமாக நினைவேந்தல்கள்
செய்யும் சூழ்நிலையினை உருவாக்கவேண்டும்.
ஜனநாயக ரீதியான போராட்டம்
இதேபோன்று, யுத்ததிற்கு முன்னரும் பின்னரும் பலர் வலிந்து
காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாத
நிலையில் ஜனநாயக ரீதியாக நீதிகோரி போராடிவருகின்றனர்.
அவர்களின் ஜனநாயக ரீதியான
போராட்டத்திற்கும், அவர்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கான நியாயமான
விசாரணைகளுக்காகவும் சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் குரல்கொடுக்க வேண்டிய
கட்டாயம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.