Home இலங்கை அரசியல் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரிய ரணில்

நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரிய ரணில்

0

சர்வஜன வாக்குரிமையைப் பின்பற்றி ஜனநாயகத்தைப் பேணுவதில் இலங்கை தனித்துவம் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த ஜனநாயக மரபைப் பேண அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

காலியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புத் திருத்தம்

அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ளும் போது அந்த விடயத்துடன் தொடர்புடைய அனுபவமுள்ள ஒருவரிடம் தான் பொறுப்பை ஒப்படைத்ததாகவும், அதன் படி கே.என்.சொக்சி போன்ற சட்டத்தரணிகளைக் கொண்டு அவ்வாறான பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

எவ்வாறாயினும், 2015ஆம் ஆண்டு அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்ட போது சொக்சி உயிருடன் இல்லை, எனவே இந்த விடயத்தை சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்னவிடம் ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்போது அவர் தவறிழைத்தமையினால் தற்போதைய பிரச்சினையான நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்தார்.

1931 ஆம் ஆண்டில் ஆசியா, ஆபிரிக்காவில் முதல் முறையாக இலங்கையே சர்வஜன வாக்கெடுப்பு அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டது. வேறு எந்த நாட்டுக்கும் கிடைக்கவில்லை. அமெரிக்காவின் சில பகுதிகளில் கறுப்பினத்தவர்களுக்கு வாக்குரிமை இருக்கவில்லை.

இலங்கையில் ஜனநாயகம்

அதனைப் பெற்றுக்கொண்டதிலிருந்து தொடர்ச்சியாக ஜனநாயகத்தை பேணிவரும் நாடாகவும் இலங்கை மட்டுமே விளங்குகிறது. அதனையிட்டு நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்.

யுத்தம் இருந்தாலும், கலவரங்கள் ஏற்பட்ட போதிலும் 1931 ஆம் ஆண்டு முதல் ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் ஜனநாயகத்தைப் பாதுகாத்த ஒரே நாடு இலங்கை ஆகும்.

நாம் எவ்வளவு வாதிட்டாலும் ஜனநாயகத்தை இல்லாமல் செய்ய இடமளிக்கவில்லை.

தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, இலங்கையில் மாத்திரமே மோதல் இல்லாமல் அதிகாரம் மாற்றப்படுகிறது.

இந்த நாட்டில் ஜனநாயகம் செயல்படுகிறது. விவாதங்கள் இருந்தபோதிலும், ஜனநாயகம் ஒருபோதும் இழக்கப்படுவதில்லை என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version