Home இலங்கை அரசியல் வரிசை யுகம் மீண்டும் வர இடமளியேன்: இளைஞர்கள் மத்தியில் ரணில் வெளியிட்ட அறிவிப்பு

வரிசை யுகம் மீண்டும் வர இடமளியேன்: இளைஞர்கள் மத்தியில் ரணில் வெளியிட்ட அறிவிப்பு

0

வரிசைகளற்ற மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நாட்டைக்
கட்டியெழுப்புவதே தனது நோக்கம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை தியத உயன வெளிப்புற அரங்க மண்டபத்தில் நேற்று இரவு நடைபெற்ற Open
Mic Night இளைஞர் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்களுடன் சிநேகபூர்வமாக
உரையாடியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்பாராதவிதமாக அந்த இடத்துக்குச் சென்ற ஜனாதிபதியை இளைஞர்கள் அன்புடன்
வரவேற்றனர்.

இளைஞர்கள் மத்தியில் அமர்ந்து அவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடிய ஜனாதிபதி,
அவர்களின் கேள்விகளுக்குச் சாதகமான பதில்களை வழங்கியுள்ளார்.

நீங்கள் அரசிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று அங்கிருந்த இளைஞர்
ஒருவரிடம் ஜனாதிபதி கேட்டதற்கு அந்த இளைஞர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
என்றார்.

பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பொறுப்பு

நாட்டின் இளைஞர்கள் மகிழ்ச்சியாக இருக்க நல்ல அரசு அவசியம் என்று தெரிவித்த
ஜனாதிபதி, நாட்டின் இளைஞர்களுக்கு நல்லதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்பும்
பொறுப்பை தாம் எடுத்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் வரிசையில் நிற்க முடியாது என்று இளைஞர் ஒருவர் தெரிவித்த
கருத்துக்குப் பதிலளித்த ஜனாதிபதி, தனது ஆட்சியில் இந்த நாட்டின் இளைஞர்கள்
சினிமா வரிசையில் மாத்திரமே நிற்க வேண்டி ஏற்படும் என்றார்.

இளைஞர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க, தனது கடந்த கால அனுபவத்தை நினைவு
கூர்ந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கல்வி அமைச்சராக தாம் வெள்ளை
அறிக்கையைச் சமர்ப்பித்த போது, ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, தன்னை அழைத்து
வெள்ளை அறிக்கை நல்லதுதான், ஆனால் மறுசீரமைப்புகளை முன்னெடுக்கச் சென்று
அரசுக்கு ஆபத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

மேலும், அந்த மறுசீரமைப்புகளைச் செய்து தொழிலை இழக்க வேண்டாம் என்று ஜே.ஆர்.
ஜயவர்தன தமக்கு அறிவுறுத்தல்களை வழங்கியதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அந்த
அறிவுறுத்தல்களுக்கு அமைய தான் இதுவரை செயற்பட்டதாகவும், ஆனால் இம்முறை
நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் பின்னர் அவற்றுக்கு முரணாக நடக்க
நேரிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு வங்கிகள் ஊடாக கடன் 

இரண்டு வருடங்களுக்கு முன்னர் தாம் நாட்டைப் பொறுப்பேற்ற போது பொருளாதாரம்
முற்றாக வீழ்ச்சியடைந்திருந்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, கடன் சுமையுடன்
தொடர்ந்தும் சென்றால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என சர்வதேச நாணய
நிதியம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

அதன் பிரகாரம், உள்நாட்டு வங்கிகள் ஊடாக கடன் பெற வேண்டாம் என்றும் பணத்தை
அச்சிட வேண்டாம் எனச் சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியதாகவும், அந்த
நிலையைக் கருத்தில்கொண்டு அரச வருமானத்தை ஈட்டுவதற்கு வட் வரியை அதிகரிக்க
வேண்டியேற்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாவிட்டால் நாட்டை தற்போதைய நிலைக்குக்
கொண்டு வர முடியாது என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது
சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த இடத்துக்கு எதிர்பாராத விதமாக வருகை தந்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி
தெரிவித்த இளைஞர்கள், தமது தேவைகள், எதிர்பார்ப்புகள் குறித்து ஜனாதிபதியுடன்
நேரடியாகக் கலந்துரையாட முடிந்தமை தொடர்பில் தமது மகிழ்ச்சியையும்
தெரிவித்தனர் என்று ஜனாதிபதி ரணிலின் தேர்தல் பிரசார ஊடகப் பிரிவு
தெரிவித்துள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23

Source: https://tamilwin.com/article/ranil-election-speech-1725891355

NO COMMENTS

Exit mobile version