Home இலங்கை அரசியல் சமஷ்டி தொடர்பாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய ரணில்

சமஷ்டி தொடர்பாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய ரணில்

0

சமஷ்டி முறையான அரசியல் தீர்வுக்கு ஆதரவான, பலம் மிக்க நாடாளுமன்றம் ஒன்று
அமையும் பட்சத்தில் அது சம்பந்தமாகப் பரிசீலித்து முன்னேற்றகரமான முடிவுகளை
எதிர்காலத்தில் எட்ட முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

தம்மை நேற்று (12.08.2024) திங்கட்கிழமை சந்தித்த மூன்று தமிழ்க் கட்சிகளின்
பிரதிநிதிகளிடமே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட் மற்றும்
ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய மூன்று கட்சிகள் ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று அவரைச் சந்தித்தன.

இந்தச் சந்திப்பு தொடர்பில் ரெலோவின் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் வெளியிட்டுள்ள
அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பவை வருமாறு,

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி செயலகத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) சார்பில் அதன் தலைவர்
செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம், பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை
முன்னணி (புளொட்) சார்பில் அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் அவரை சந்தித்தனர்.

தமிழ்ப் பொது வேட்பாளர்

தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கிய
சூழலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுக் கட்டமைப்பின்
உறுப்பினர்களைச் சந்திப்பதற்கான அழைப்பைத் தனித்தனியாக அரசியல் கட்சிகளுக்கும்
பொது அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகளுக்கும் விடுத்திருந்தார்.

மேற்குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் இந்த அழைப்புக்கு மதிப்புக் கொடுத்து தமிழ்
மக்களின் பிரச்சினை சம்பந்தமான தங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தவும்,
ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களினுடைய அரசியல் அபிலாஷைகளைத் தீர்ப்பதற்காக
முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகளைப் பற்றி தெரிந்துகொள்வதற்காகவும் இந்தச்
சந்திப்பில் பங்கேற்பது என்று முடிவு செய்தனர்.

இந்தச் சந்திப்பில் பிரதானமாகத் தமிழ் மக்களினுடைய அரசியல் அபிலாஷைகளைத்
தீர்க்கும் முகமான சமஷ்டி முறையான அரசியல் தீர்வு தொடர்ந்தும் தீர்க்கப்படாமல்
இருப்பதனாலேயே தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது என்பது
தெளிவுபடுத்தப்பட்டது.

ஜனாதிபதி தரப்பில் சமஷ்டி முறையான அரசியல் தீர்வு என்பது பலம் மிக்க
நாடாளுமன்றம் ஒன்று அமையும் பட்சத்தில் அது சம்பந்தமாகப் பரிசீலித்து
முன்னேற்றகரமான முடிவுகளை எதிர்காலத்தில் எட்ட முடியும் என்று
தெரிவிக்கப்பட்டது.

அதுவரை பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் ஊடாகக் கொண்டுவரப்பட்ட
மாகாண சபைக் கட்டமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்காகத் தான்
அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

மக்களின் அரசியல் அபிலாஷைகள்

அதற்காகத்
தன்னிடம் தயாரித்து வைக்கப்பட்டிருக்கும் யோசனைகள் அடங்கிய ஆவணம் ஒன்றையும்
அவர் சமர்ப்பித்தார்.

ஏற்கனவே மாகாண சபையின் பறிக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களையும் மீள
வழங்குவதாகவும், நிதி உட்பட மேலதிக அதிகாரங்களையும் பொருளாதார அபிவிருத்தி
ஆணைக்குழுவையும் மாகாண சபை கொண்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் சார்பில், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, எஞ்சியுள்ள அரசியல்
கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு மற்றும் அபகரிப்பை தடுப்பது, தமிழ்
இளைஞர்கள், யுவதிகள் நீதியற்ற முறையில் கைது செய்யப்படுவது, விசாரணை என்ற
போர்வையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும்
அச்சுறுத்தல் நடவடிக்கையை நிறுத்துதல், இந்திய கடற்றொழிலாளர்களுடைய அத்துமீறல் உட்பட பல விடயங்கள் தீர்க்கப்பட வேண்டும்
என்று வலியுறுத்தப்பட்டன.

இதற்கான தீர்வுகளை தான் நிச்சயமாக வழங்குவதாகவும், ஏற்கனவே சில விடயங்களுக்கான
தீர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக அரசியல் கைதிகள் விடுதலை
மற்றும் தொல்லியல் விவகாரங்களைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்க, தான் சமர்ப்பித்த ஆவணத்தில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன
எனவும், அவற்றைப் பரிசீலித்த பின்னர் தொடர்ந்தும் சந்திப்புகளை மேற்கொள்ள
முடியும் என்றும் தெரிவித்தார்.

மக்களின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்க்கும் முகமான மேலதிக கலந்துரையாடல்களை
நடத்துவதற்கு தமது தரப்பிலும் தயாராக இருப்பதாகச் சொல்லிய தமிழ்த் தரப்பினர்,
அவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் சம்பந்தமான விடயங்களை ஆராய்ந்து கருத்துத்
தெரிவிப்பதாகக் கூறியதுடன் சந்திப்பு நிறைவடைந்தது” – என்றுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version