நாடு எதிர்கொள்ளும் எந்தவொரு சவாலையும் முறியடிக்கக் கூடிய வலிமையான மற்றும் திறமையான அணி தன்னிடம் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
கொழும்பு (Colombo) ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை தொழில் வல்லுநர் சங்கங்களின் அமைப்பின் (OPA) 37வது வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை வெற்றிகரமான முடிவுக்கு கொண்டு செல்வதற்கான சூழலை உருவாக்குவது நாட்டு மக்களின் பொறுப்பு எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
ஐஎம்எப் ஒப்பந்தம்
நாட்டில் விரைவான பொருளாதார மீட்சியை ஏற்படுத்துவதே தமது இலக்காகும் எனவும், அந்த இலக்கை இதுவரை எட்டியுள்ளதாகவும் நிலையான பொருளாதார வளர்ச்சியை பேணுவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைக்கு அமைவாக செயற்படுவது மிகவும் முக்கியமானது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்தம் தான் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதன் மூலம் இலங்கைக்கு கணிசமான நிவாரணம் கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.