Home முக்கியச் செய்திகள் பொதுத் தேர்தலுக்கான ரணில் – சஜித் கூட்டணி குறித்து வெளியான தகவல்

பொதுத் தேர்தலுக்கான ரணில் – சஜித் கூட்டணி குறித்து வெளியான தகவல்

0

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு கூட்டணி அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் இரண்டு தினங்களுக்குள் பேச்சுவார்த்தைகள் நிறைவுக்கு வரும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய (Saman Rathnapriya) தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியுடனான (SJB) பேச்சுவார்த்தையை தொடர்வதற்கு இன்னும் சந்தர்ப்பம் இருக்கிறது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு கூட்டணி அமைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுத்துவரும் நடவடிக்கை தொடர்பாக தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நிபந்தனைகள் 

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், “நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கே ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் 3 பிரதான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம்.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தி முன்வைக்கும் சில நிபந்தனைகள் காரணமாக பேர்ச்சுவார்த்தையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் தடைகள் ஏற்பட்டுள்ளன. எனினும் ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சுவார்த்தையை இன்னும் நாங்கள் முடிவுக்கு கொண்டுவரவில்லை.

தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு இன்னும் சந்தர்ப்பம் இருக்கிறது. அவர்களுடன் தொடர்ந்தும் பேசுவதற்கே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

ஏனெனில் இணைந்து போட்டியிடுவதன் மூலம் அரசாங்கத்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அல்லது நாடாளுமன்றத்தில் பலமானதொரு எதிர்க் கட்சியை அமைத்துக்கொள்ள முடியும்.

ரணிலுக்கு ஆதரவளித்த கட்சிகள் 

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சுவார்த்தை அவ்வாறு இருக்கும் நிலையில், நாங்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்த கட்சிகள் மற்றும் கூட்டணிகளுடனும் கலந்துரையாடி பாரிய கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவாரத்தை நடத்தி வருகிறோம்.

இந்த பேச்சுவார்தை இன்னும் ஓரிரு தினங்களில் முடிவுக்கு வரும். இந்த கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதற்காக குழுவொன்றையும் அமைத்திருக்கிறோம்.

எனினும் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பதில் இன்னும் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளவில்லை. இந்த விடயத்தில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

கதிரை சின்னத்தில் போட்டியிடுமாறு சிலர் தெரிவிக்கும் நிலையில், சிலிண்டர், அன்னம் மற்றும் யானை சின்னமும் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. இதுதொடர்பில் நாளை மறுதினம் இறுதி முடிவு எடுக்கப்படும்“ என அவர் மேலும் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version