அநுர தலைமையிலான அரசுக்கெதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி எதிர்க்கட்சிகள் நடத்தவுள்ள பேரணியில் முக்கியமானவர்கள் எவரும் பங்கேற்கமாட்டார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க,ராஜித சேனாரத்ன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் மேற்படி பேரணியில் கலந்து கொள்ளமாட்டார்கள் என தெரியவருகிறது.
ரணில் விக்ரமசிங்க பங்கேற்க மாட்டார்
இந்த அரசாங்க எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்க மாட்டார் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த நிகழ்வு தொடர்பாக நேர்மறையான மற்றும் எதிர்மறையான அம்சங்கள் இரண்டும் இருப்பதாகவும், இந்த விடயம் குறித்த தனது கருத்துக்களை கட்சித் தலைமைக்கு ஏற்கனவே தெரிவித்துவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாட்டலி சம்பிக்க ரணவக்க
இதேவேளை எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் தாம் பங்கேற்கப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அறிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக தனது நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
