ரணிலின் பொருளாதார கொள்கையை கடுமையாக விமர்சித்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) எவ்வித மாற்றமுமின்றி அந்த பொருளாதார கொள்கையை முழுமையாக செயற்படுத்துகிறார் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச்செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதியின் பொருளாதார மீட்சிக்காக எடுக்கப்படும் திட்டங்கள் வெற்றி பெற்றால் அதன் பெருமை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையே (Ranil Wickremesinghe) சாரும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (25) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ரணில் ஜனாதிபதியாக தெரிவு
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்தின. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் தீர்மானங்களை எடுத்தோம்.
இதற்கமைய மாறுபட்ட அரசியல் கொள்கையை கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்கினோம். இருப்பினும் எமது ஆதரவை தவறான வகையில் பயன்படுத்த முயற்சித்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம்.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி
பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்தி தமது அரசியல் செல்வாக்கை பலப்படுத்திக் கொள்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக கடுமையாக செயற்பட்டதால் கட்சி என்ற ரீதியில் எமக்கான இருப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளோம்.
தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாக்கப்பட்டுள்ளன. வெறுப்புக்களை முன்னிலைப்படுத்தியே ஆட்சிக்கு வந்தனர்.
ஆகவே வெறுப்பு அரசியல் நீண்டகாலத்துக்கு நிலைத்திருக்காது. நாட்டு மக்கள் வெகுவிரைவில் உண்மையை விளங்கிக் கொள்வார்கள்.
ரணிலின் பொருளாதார கொள்கை
பொருளாதார மீட்சிக்காக எடுக்கப்படும் திட்டங்கள் வெற்றி பெற்றால் அதன் பெருமை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சேர வேண்டும்.
ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார கொள்கையை கடுமையாக விமர்சித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தற்போது முழுமையாக நடைமுறைப்படுத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்டங்கள் சிறந்த முறையில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். இருப்பினும் தேசிய வளங்களையும், அரச நிறுவனங்களையும் தனியார்மயப்படுத்தும் தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்“ என தெரிவித்தார்.