Home இலங்கை அரசியல் தமிழ்த் தேசியத்தைச் சிதறடிக்கும் சக்திகளை புறந்தள்ளுவோம் : சுரேஷ் பிரேமச்சந்திரன்

தமிழ்த் தேசியத்தைச் சிதறடிக்கும் சக்திகளை புறந்தள்ளுவோம் : சுரேஷ் பிரேமச்சந்திரன்

0

தமிழ்த் தேசியத்தைச் சிதறடிக்கும் சக்திகளை புறந்தள்ளுவோம் என
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய
கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் க. பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்தார்.

கடந்த 22.10.2024ஆம் திகதி மல்லாகத்தில் நடைபெற்ற மக்கள்
சந்திப்பு குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தமிழ் கட்சிகள் ஐக்கியப்பட்டு செயற்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின்
ஒருமித்த கோரிக்கையாக நீண்டகாலம் இருந்து வருகின்றது.

தமிழரசுக் கட்சி

2002ஆம் ஆண்டு விடுதலைப்
புலிகளின் ஒத்துழைப்புடன் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகளை இணைத்து
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஓர் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டது.

அந்த
ஐக்கிய முன்னணிக்கு ஓர் அமைப்பு வடிவம் உருவாக்கப்பட வேண்டும். அதற்கான
தலைவர், செயலாளர் உட்பட நிறைவேற்றுக் குழுக்கள் போன்றவை உருவாக்கப்பட வேண்டும்
அது தேர்தல்கள் ஆணையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் போன்ற விடயங்களை அதன்
தொடக்கத்திலிருந்தே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வலியுறுத்தி வந்தது.

ஆனால் தமிழரசுக் கட்சியின் தலைமைப்பீடம் அதனைத் தொடர்ச்சியாக நிராகரித்து
வந்தது மாத்திரமல்லாமல் உட்கட்சி ஜனநாயகம் என்ற எதுவுமே இல்லாமல் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பானது படிப்படியாக சீரழிந்து போனது.

குறிப்பாகக் கூறுவதாக இருந்தால், தமிழரசுக் கட்சிக்குள் புதிதாக
உள்வாங்கப்பட்டவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழித்து ஒழிக்க வேண்டுமென்ற
நிகழ்ச்சி நிரலுடனும் தேசிய இனப்பிரச்சினையை நீர்த்துப்போகச் செய்ய
வேண்டுமென்ற நோக்கத்துடனும் செயற்பட்டார்கள் என்பது வெளிப்படை.

சிறுபிள்ளைத்தனமான விடயம்

இன்று
தமிழரசுக் கட்சியும் ஒரு தலைமைத்துவம் இல்லாமல் தனக்குள் சின்னாபின்னப்பட்டு
தீர்க்கமான எந்த முடிவுகளும் எடுக்க முடியாமல் நீதிமன்றம்வரை சென்றிருக்கிறது.

இத்தகைய ஒரு நிலையில் தமிழரசுக் கட்சி வடக்கு கிழக்கில் பல ஆசனங்களை எடுத்து
ஒரு வலுவான நிலையில் நாடாளுமன்றம் சென்று புதிதாக வரவுள்ள அரசாங்கத்துடன்
பேச்சுவார்த்தை நடத்தி தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்போமென சுமந்திரன் (M. A. Sumanthiran) கூறுவது சிறுபிள்ளைத்தனமானதும் சிரிப்புக்குரிய விடயமுமாகும்.

தனது
கட்சிக்குள் இருக்கக்கூடிய பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் நீதிமன்றம்வரை
சென்றது மாத்திரமல்லாமல் தமிழரசுக் கட்சியினுடைய வேட்பாளர் நியமனங்களை
நிராகரித்து அதே கட்சியைச் சார்ந்த முக்கியஸ்தர்களை சுயேட்சைக்குழுவாக
போட்டியிட வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியத்தைச் சிதறடித்து அதிலிருந்த அனைத்துக்
கட்சியினரும் வெளியேறக் காரணமாக இருந்தவர்கள் பின்னர் தமது கட்சியான தமிழரசுக்
கட்சியையும் சின்னாபின்னப்படுத்தியவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத்
தீர்ப்பார்கள் என்றோ தமிழ்த் தேசியத்திற்கு விசுவாசமானவர்களாக இருப்பார்கள்
என்றோ எதிர்பார்க்க முடியாது.

இனப்பிரச்சினை தீர்வு

எனவே இத்தகையவர்கள் நாடாளுமன்றம் செல்வதென்பது
தமிழ்த் தரப்பு ஒற்றுமை படாமல் தொடர்ந்தும் சிதறிப்போகவே வழிவகுக்கும்
என்பதுடன் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்விற்கு இது எந்த
விதத்திலும் உடன்பாடானதாகவோ உந்து சக்தியாகவோ இருக்க மாட்டாது என்பதை தமிழ்
மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும், எந்தவிதமான கொள்கை முடிவுகளுமின்றி தேசிய இனப்பிரச்சினை தொடர்பாகவோ
வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பாகவோ எவ்வித தொலைநோக்குமற்று இருக்கக்கூடிய
சில தனிநபர்கள் சுயேட்சைக் குழுக்களாக தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்க
முனைந்திருப்பதும் வருந்தக்கூடிய ஒரு செயலாகும்.

இந்த நிலையில் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி களம் பல கண்டு சகல
துன்பங்கள், துயரங்கள், வலிகளுக்கு முகங்கொடுத்து எமது மக்கள் பாதுகாப்பாகவும்
கௌரவமாகவும் தமது சொந்தப் பிரதேசத்தில் சுயாட்சியுடன் வாழவேண்டும் என்ற
நோக்குடன் செயற்படக்கூடிய போராட்ட சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஜனநாயக
தமிழ் தேசிய கூட்டணி என்ற ஓர் ஐக்கிய முன்னணியை உருவாக்கியுள்ளனர்.

பொது வேட்பாளர்

இவர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொது கட்டமைப்பை உருவாக்கி அதனூடாக
ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி குறுகிய காலத்தில் 2,26,000 வாக்குகளை எடுத்து
தமிழ் மக்களின் பிரச்சினை தீரக்கப்பட வேண்டுமென்பதை மிக உறுதியான குரலில்
அனைவரினதும் காதுகளுக்கும் எட்டச் செய்தவர்கள்.

அதனுடைய தொடர்ச்சியாக தமிழ்
மக்களின் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதை முன்னெடுத்துச்
செல்லக்கூடிய ஓர் அமைப்பாக மாத்திரமல்லாமல் இந்த ஐக்கிய முன்னணிக்குள்
அனைவரையும் இணைத்து அதனை பலமிக்க சக்தியாக்கி, தமிழ்த் தேசிய
இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று முயற்சிப்பவர்கள் ஜனநாயக தமிழ்
தேசிய கூட்டணியினர் மாத்திரமே.

ஐக்கியத்திற்கு எதிராகச் செயற்படுபவர்களையும் தமிழ் மக்களின் வாக்குகளைச்
சிதறடித்து இந்தத் தேர்தலை ஒரு கேலிக்கூத்தாக்க முனையும்
சுயேட்சைக்குழுக்களையும் தமிழ் மக்களுக்கு எது நடந்தாலும்சரி தென்னிலங்கை
சிங்களக் கட்சிகளுடன் இணைந்துதான் செயற்படுவோம் என்கின்ற தமிழ்த் தரப்பு
கட்சிகளையும் நிராகரித்து தமிழ் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ள
தகுதியானவர்களாகவும் தமிழ் மக்களின் உண்மையான அபிவிருத்தியை முன்னெடுத்துச்
செல்லக்கூடியவர்களாகவும் இருக்கக்கூடிய சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்ற
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரை பலமிக்க சக்தியாக நாடாளுமன்றம்
அனுப்புவதனூடாக தமிழ் மக்களாலும் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்று
நாங்கள் நம்புகின்றோம்“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version