நாடு தற்போது வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டிருப்பதன் காரணமாக பொருட்களின் விலைகள் மேலும் குறைவடைந்து மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளரும், முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, “தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில், வெளிநாட்டு முதலீடுகள் நாட்டிற்கு திரும்பி வருகின்றன. நிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டு வளர்ச்சித் திட்டங்கள் மீண்டும் தொடங்குகின்றன. நாடு கடனில் இருந்து மீண்டு வருகிறது.
வெளிநாட்டுக் கடன்
நாடு மீண்டு வருவதால் அச்சம் அடைந்துள்ள எதிர்கட்சியின் சந்தர்ப்பவாதிகள் அரக்கர்களையும் பலி ஆடுகளையும் உருவாக்கி மக்களை தவறாக வழிநடத்தி நாட்டின் பயணத்தை தடுக்க சதி செய்கிறார்கள்.
கடந்த வாரம், அனைத்து கடன் வழங்குநர்களும் எங்கள் நாட்டிற்கு தங்கள் ஆதரவை வழங்க ஒப்புக்கொண்டனர். மொத்த வெளிநாட்டுக் கடன் 37 பில்லியன். அந்த கடனில் 28% குறைக்கப்படும்.
வெளிநாட்டு கடன் வழங்குபவர்கள் ஒரு நாடாக நமது கடனை செலுத்தும் முறையை ஏற்க ஒப்புக்கொண்டனர். இந்த கடனை செலுத்த 2028 வரை எங்களுக்கு கால அவகாசம் உள்ளது.” என கூறியுள்ளார்.