மன்னார் மக்களின் கோரிக்கைகளை ஏற்று மன்னாரில் நடைமுறைப்படுத்தும்
காற்றாலை, கணிய மணல் அகழ்வு திட்டங்களை ஜனாதிபதி மன்னார் தீவில் இருந்து
வெளியேற்ற வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை சந்தியோகு
மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு
வருகின்ற சுழற்சி முறையிலான போராட்டத்தில் இன்று(03.09.2025) கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி வழங்கிய ஒரு மாத கால அவகாசத்தில் 19 நாட்கள் முடிவடைகிறது. அரச
தரப்பில் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து முயற்சிகளும், தமது காரியங்களை மிகவும்
சாதுரியமாக நிறைவேற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மக்களின் நலன்
குறித்த செயற்பாடுகள் எமக்கு கவலையை தருகின்றது. மன்னார் செயலகம் இது
வரை எவ்வித கண்காணிப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்காது தவிர்த்து
வருவது கண்டனத்திற்குரியதும் கவலைக்குரியதுமான விடயமாகும்.
மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு மும்முரமாக இந்த பணியில் இறங்கி மக்களின்
வேண்டுகோளையும், மக்களின் வேதனைகளையும் அரசுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை உள்ளது.
ஆனால், மன்னார் மாவட்டச் செயலகத்தின் செயற்பாடுகள் மந்தமாக இருப்பதால்
மக்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்டச் செயலகம் துரிதமாக செயற்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
