மன்னார் (Mannar) நகரசபை வெட்கக்கேடான நிலைக்கு உள்ளாகியுள்ளமை மன்னார் மக்கள்
மத்தியில் பல்வேறு விமர்சனங்களையும் நகரசபை மீதான நம்பிக்கையையும் இழக்க
செய்துள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக காவல்துறையினரின் பாதுகாப்புடன் அமர்வு இடம் பெற வேண்டிய
நிலைக்கு மன்னார் நகரசபை சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரையான காலப்பகுதியில் என்றும் இல்லாதவாறு புதிய நகரசபை தலைவரின் தலைமையில்
ஒவ்வொரு முறையும் நகரசபை ஒத்திவைக்கப்படும் நிலமையே காணப்படுகின்றது.
எதிர்கட்சியின் கேள்விகள் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்சியாக
புதிய தலைவர் அமர்வுகளை ஒத்திவைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
முறையான அபிவிருத்தி திட்டங்களோ, மக்களுக்கு பயனுள்ள செயற்பாடுகளோ தீர்மானங்களோ
பிரேரனைகளோ கொண்டுவரமுடியாத நிலையே ஒவ்வொரு அமர்வும் காணப்படுகின்றது.
மன்னார் நகரசபையை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் உள்ள சபைகள் வினைத்திறனாக
செயற்பட்டு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முனெடுத்து வருகின்ற நிலையில்
புதிய தலைவரால் ஒரு நகரசபை அமர்வை கூட முழுமையாக நடத்த முடியாத அவல நிலையை அவர் எதிர்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நகரசபையினால் நிறைவேற்றப்பட வேண்டிய பல வேலைத்திட்டங்கள் கிடப்பில்
போடப்பட்டுள்ள நிலையில் ஆளும் கட்சியான ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ரிஷாட் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தியின்
உறுப்பினர்கள் பெரும்பாலும் காடு வெட்டுதல் கழிவுகள் அள்ளுதலுடன் அனைத்து
நிகழ்வுகளுக்கு விருந்தினர்களாக கலந்து கொள்வதை மாலை அணிந்து கொண்டு மரியாதை
பெற்று கொள்வதை மாத்திரமே நேர்த்தியாக செய்து வருவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தொடர்சியாக மக்களின் வரிப்பணம் நகரசபை அமர்வுக்கு செலவழிக்கப்பட்டு அமர்வு
இடம் பெறுகின்ற போது எந்த அமர்வும் மக்களின் தேவையின் அடிப்படையில் சிறப்பான
தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு அதை நடைமுறைப்படுத்துவதற்கான எந்த ஒரு
முன்னெடுப்புக்களும் இடம்பெறாமல் வன்முறையோடும் முரண்பாடுகளோடும் மற்றும் வாய்தர்கங்களோடும் ஒவ்வொறு முறையும் ஒத்திவைக்கப்படுகின்றன.
இவ்வாறான நிலையில் மன்னார் நகரசபையின் நாளைய அமர்வாவது ஒழுங்காக இடம்பெறுமா
இல்லை மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் பயக்காத ஒரு அமர்வாக நிறைவடையுமா என்பது
தொடர்பில் எதிர்பார்புடன் காத்திருக்க வேண்டிய நிலைக்கு மன்னார் நகரசபை மக்களை
தள்ளியுள்ளது.
இவ்வாறான நிலையில் மன்னார் நகரசபையின் ஒத்திவைக்கப்பட்ட அமர்வு நாளைய தினம்
காலை 9.00 மணியளவில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
