Home இலங்கை சமூகம் கெஹெலியவின் குடும்பத்தினர் மீதான தடை : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கெஹெலியவின் குடும்பத்தினர் மீதான தடை : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

0

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் (Keheliya Rambukwella) மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிக் கொள்கைகளை செயற்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் நீடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், மேலும் மூன்று மாதங்களுக்கு தடை உத்தரவை நீடிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்கொள்ளப்பட்ட விசாரணை

ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனைவி, மகள்கள் மற்றும் உறவினர்களின் 97 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வங்கி நிலையான வைப்புக்கள் மற்றும் ஆயுள் காப்புறுதிக் கொள்கைகளை நிறைவேற்றுவதைத் தடுக்கும் உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவு இன்றுடன் நிறைவடையவிருந்த நிலையில், அதனை மேலும் நீடிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்றம், மேற்படி உத்தரவை ஏப்ரல் இரண்டாம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version