வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இம்மாதம் 20ஆம் திகதி பிற்பகல் 12.00 மணியுடன் நிறைவடைவதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 04 ஆம் திகதி முதல் அரிசி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியது, இதனால் அரிசி இறக்குமதி கடந்த 10 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று (17) பிற்பகல் வரை 9,500 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 3,300 மெட்ரிக் தொன் பச்சை அரிசியும் 6,200 மெட்ரிக் தொன் நாட்டரிசியும் அந்த அரிசி கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மீள அனுப்பட்ட கையிருப்பு
இதேவேளை, இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் 75,000 கிலோகிராம் அரிசி பாவனைக்கு தகுதியற்றதாக இருந்ததால் அவற்றை மீள எடுத்துச் செல்லுமாறும் இறக்குமதியாளர்களுக்கு சுங்கத் திணைக்களம் அறிவித்திருந்தது.
அந்த அரிசி கையிருப்பில் 50 000 கிலோகிராம் பாவனைக்கு தகுதியற்ற அரிசியும், காலாவதியான 25 000 கிலோ அரிசியும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.