அரிசியின் விலையை முன்னைய விலையை விட 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசாங்கத்தினால் அரிசிக்கான விலை அறிவிக்கப்பட்டமை தொடர்பில் அதன் தலைவர் யூ.கே.சேமசிங்க (U. K. Semasinghe) வெளியிட்ட அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”அரிசியின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. நம் நாட்டில் அரிசி தொடர்பில் வர்த்தமானி விலையொன்று காணப்படுகிறது.
நிர்ணயிக்கப்பட்ட விலை
பச்சை அரிசி கிலோ 210 ரூபாவாகவும், நாடு அரிசி கிலோ 220 ரூபாவாகவும், சம்பா கிலோ 230 ரூபாவாகவும், கீரி சம்பா 260 ரூபாவாகவும் இருந்தது. ஆனால் இன்று முதல் கீரி சம்பா தவிர்ந்த ஏனைய 3 அரிசி வகைகளுக்கு 10 ரூபா அதிகரிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை அல்ல செய்திருக்க வேண்டும்.
விதிமுறைக்கு உட்பட்டு அரிசி விற்பனை செய்வது தொடர்பாக ஆராய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இன்று முதல் நுகர்வோர் அதிகாரசபை (Consumer Affairs Authority) ஊடாக அரிசி சோதனைகள் ஆரம்பிக்கப்படும் என நம்புகின்றோம்.
நுகர்வோர் அதிகாரசபை
அவ்வாறு செய்யாவிட்டால், இந்நாட்டு நுகர்வோர் பாரிய அநீதிக்கு உள்ளாக நேரிடும். அரிசியை 10 ரூபாவால் அதிகரித்து, அதனூடாக ஆலை உரிமையாளர்களின் இலாபத்தையும் 10 ரூபாவால் உயர்த்தும் நிலைமை இதுவாக இருக்கக் கூடாது.
எனவே, நுகர்வோர் அதிகாரசபை இலங்கை முழுவதும் உள்ள அனைத்து கடைகளிலும் அரிசி ஆலைகளிலும் சோதனை நடத்தி இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.