அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன்(risad badhiutheen) ரணில் விக்கிரமசிங்கவுக்கு(ranil wickremesinghe) ஆதரவா என புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
வவுனியா(vavuniya), வைரவபுளியங்குளத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரசார கூட்ட மேடையை நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் இன்று (31.08) பார்வையிட்டுள்ளார். இதன் காரணமாகவே குறித்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ரணிலின் பிரசார கூட்டம்
வவுனியாவிற்கு நாளைய தினம் (01.09) வருகை தரும் ஜனாதிபதி வேட்பாளரும், ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் மைதானத்தில் நடைபெறும் தேர்தல் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றார்.
அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றது.
கூட்ட ஏற்பாட்டை பார்வையிட்ட ரிசாட்
இந்நிலையில் குறித்த ஏற்பாடுகள் இடம்பெறும் இடத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் அவற்றை பார்வையிட்டிருந்ததுடன், அங்கு நின்ற சிலருடன் உரையாடியும் இருந்தார்.
ஏற்கனவே, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு என அறிவித்த நிலையில் குறித்த இடத்திற்கு சென்று ரணில் விக்ரமசிங்கவின் பிரசார கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட்டமை அவரது ஆதரவு யாருக்கு என சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.