Home இலங்கை அரசியல் ஜனாதிபதி செயலகத்தால் இடைநிறுத்தப்பட்ட ரிஷாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள்

ஜனாதிபதி செயலகத்தால் இடைநிறுத்தப்பட்ட ரிஷாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள்

0

Courtesy: Sivaa Mayuri

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனால் ( Rishad Bathiudeen ) ஆறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த 200 மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள், ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, புத்தளம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய ஆறு மாவட்டங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை ரிஷாட் பதியுதீன் பெற்றிருந்தார்.

ஜனாதிபதி செயலக கணக்காளர்

பொதுமக்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், நலன்புரிச் சங்கங்கள் மற்றும் ஏனைய சமூக அடிப்படையிலான அமைப்புக்களின் கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அந்தப் பிரதேசங்களின் அவசர அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி செயலக கணக்காளரினால், கடந்த வியாழக்கிழமை திட்டங்களை நிறுத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன் குறித்த திட்டங்களை நிறுத்துமாறும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிதியை ஜனாதிபதி செயலகத்திற்கு மாற்றுமாறும் ஜனாதிபதி செயலக கணக்காளர், மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு

இந்தநிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக தாம் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பது மிகவும் கவலைக்குரியது என்று ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு, ஜனாதிபதிக்கு தெரியாமல், சில அதிகாரிகளால் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இந்த உத்தரவுகளை இரத்து செய்யாவிட்டால் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறையிட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று எச்சரித்த அவர், இந்த முயற்சிகள் “நெறிமுறையற்ற நடவடிக்கைகள்” மற்றும் தேர்தல் சட்டங்களை மீறுவதாகவும் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version