Home இலங்கை அரசியல் ரிஷாத்தின் சகாக்கள் பலர் ரணிலுக்கு ஆதரவு

ரிஷாத்தின் சகாக்கள் பலர் ரணிலுக்கு ஆதரவு

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை
உறுதிப்படுத்துவதற்குத் தமது பூரண ஆதரவை வழங்குவதாக ரிஷாத் பதியுதீன்
தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலரும்
தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அலிகான் ஷரீப், முசலி பிரதேச சபை
முன்னாள் தலைவர் ஏ.ஜீ.எச். சுபிஹான் மற்றும் முசலி உலமா சபை முன்னாள் தலைவர் எம்.தௌபீக்
உள்ளிட்ட கட்சி செயற்பாட்டாளர்கள் பலர் கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள
ஜனாதிபதியின் அரசியல் அலுவலகத்தில் நேற்று (09.09.2024) தமது ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

வடக்கிலுள்ள முக்கிய பிரதேச சபைகளில் ஒன்றான முசலி பிரதேச சபையின் ஒரே ஒரு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் தவிர அனைத்து உறுப்பினர்களும்
ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.

வேண்டுகோள் 

அத்துடன், நாட்டை நெருக்கடி நிலையிலிருந்து
மீட்ட ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் எமது
கட்சி ஆரம்பம் முதலே இருந்தது எனவும், கட்சித் தலைமையும் அந்த நிலைப்பாட்டையே
கொண்டிருந்தது எனவும் கட்சி முக்கியஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால், கட்சியிலுள்ள சிலரது அழுத்தம் காரணமாக கட்சியின் தலைவர் வேறு வேட்பாளரை
ஆதரிக்க முடிவு செய்தார். இருந்தாலும் எமது கட்சியின் பெரும்பான்மையானவர்களின்
ஆதரவு ஜனாதிபதிக்கே வழங்கப்படுகின்றது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஏனைய வேட்பாளர்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிலையில் நாட்டை ஏற்று
முன்னேற்றக் கூடிய ஒரே தலைமை ரணில் விக்ரமசிங்க மாத்திரமே எனவும், கட்சி
அரசியலுக்கு அப்பால் அவரை ஆதரிப்பதே உகந்தது எனவும் தெரிவித்த அவர்கள்,
கட்சித் தலைமையும் தனது முடிவை மாற்றி, ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புத்தளம் – மன்னார் வீதியைத் திறப்பது உட்பட வடக்கு முஸ்லிம்களுடன் தொடர்புள்ள
பல பிரச்சினைகளைத் தாம் ஜனாதிபதியிடம் முன்வைத்தனர் எனவும், அவற்றுக்கு
ஜனாதிபதி சாதகமான பதில் வழங்கினார் எனவும் மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version