நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த சிறப்புரிமை பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், சபை விவகாரங்களை முன்னெடுத்து செல்வதில் பெரும் சிக்கல்நிலை உருவாகும் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இராமநாதன் அர்ச்சுனா இன்று(23.01.2024) சபையில் முன்வைத்த கருத்து தொடர்பில் பதில் வழங்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
“சபாநாயகரே இங்கு நாடாளுமன்ற உறுப்பினர முன்வைத்துள்ள கருத்துக்களுக்கான தீர்வை வழங்குவது உங்களது கடமை.
எனினும் அவர் முன்வைத்த சிறப்புரிமை குற்றச்சாட்டு தொடர்பில் சபையில் தெளிவுபடுத்த வேண்டும்.
ஜனநாயகத்திற்கு எதிரான விடயம்
அவர் தற்போது நாடாளுமன்றில் உரையாற்றுவதற்கு தனக்கு வாய்ப்பளிக்கவில்லை என ஆளும் தரப்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ளார்.
அவருக்கு வாய்ப்பு வழங்காமை ஜனநாயகத்திற்கு எதிரான விடயமாகும்.
எனினும் இதற்கான முழு பொறுப்பும் எதிர்க்கட்சி தலைவரிடமே உள்ளது.
அவருக்கான நேரத்தை எதிர்க்கட்சி தலைவரே ஒதுக்கியிருக்க வேண்டும்.
இதனை நாடாளுமன்றிலும் சரி, தனிப்பட்ட முறையிலும் சரி, நான் அவருக்கு எடுத்துரைத்துள்ளேன்.
இந்நிலையில் அவருக்கு வாய்ப்பு வழங்காமை தொடர்பில் எங்களை கைகாட்டுவதில் எந்த பயனும் இல்லை.
இது தொடர்பில் மீண்டும் சபைக்கு அறிவிக்கின்றேன். தயவுசெய்து அவருக்கான நேரத்தை எதிர்க்கட்சி வழங்க வேண்டும் என்பதை இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
அர்ச்சுனா மீது பிடியாணை
அரசாங்கம் என்ற வகையில் அவரின் உரிமைக்காக நாங்கள் குரல் கொடுப்போம்.
ஏனைய துணை குழுக்களுக்கு கூட அவரை நியமித்துள்ளோம்.
சபாநாயகரே, இந்த பிரச்சினைக்கு நாடாளுமன்ற செயற்குழுவில் கலந்தாலோசித்து உரிய தீர்வை வழங்க வேண்டும்.
இல்லாவிட்டால் நாடாளுமன்றத்தை நடத்தி செல்வதில் பெரும் சிக்கல் நிலை உருவாகும்.
அர்ச்சுனா மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதற்கும் அரசாங்கத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.
பாதுகாப்பு பிரிவு தொடர்பான நடைமுறைகள் சட்டத்திற்கு அமைவாகவே இடம்பெறும்.
எவ்வாறாயினும் அவரை கைது செய்வதாக இருந்தால், அது சபாநாயகரின் அனுமதியினுடனே இடம்பெறும்.
நாங்கள் தேசிய ஒருமைப்பாட்டோடு வேலை செய்ய விரும்புகிறரோம்.
தயவு செய்து இந்த விடயத்துக்குள் தேசிய பிரச்சினையை உள்ளிழுக்க வேண்டாம்” என்றார்.