உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் மதுலரி திணைக்களம் ஆகிய மூன்று அரசாங்க திணைக்களங்களுக்கும் பெருந்தொகை வரி நிலுவைகள் உள்ளதாக பரப்பப்படும் செய்திகளில் உண்மையில்லை என மதுவரி திணைக்கள் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று நிறுவனங்களிலும் நிலுவையில் உள்ள வரித் தொகை 90 பில்லியன் ரூபா எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரி வருமானம்
மேலும், எந்தவொரு நாட்டினதும் மொத்த வரி வருமானத்தில் 3% – 5% வரையிலான வரி நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த மூன்று நிறுவனங்களும் 2023 இல் 3 டிரில்லியன் ரூபாவைத் தாண்டி வரலாற்றில் அதிகூடிய வருமானத்தைப் பெற்றதாகவும், 25 வருடங்களின் பின்னர் முதன்மைக் கணக்கில் உபரியை உருவாக்க முடிந்ததாகவும் குணசிறி குறிப்பிட்டார்.