உண்மையாக ஜனாதிபதி அநுரவின் அரசாங்கம் இனவாதமற்ற ஒரு அரசாங்கமாக இருந்தால்,
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, எவ்வாறு யுத்த வெற்றி கொண்டாட்டத்தில்
பங்கெடுத்தாரோ அதே போல முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலும் பங்கெடுத்திருக்க வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்
தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது
ஒரு விடயத்தை அவர் தெளிவாக செல்லியுள்ளார்.
அதாவது தற்போது வடக்கிலும்
தெற்கிலும் இனவாதம் மேலெழுந்து வருவதாகவும், அது ஆட்சி, அதிகாரத்தை
கைப்பற்றும் நோக்கிலும், நாட்டை குழப்பும் நோக்கிலும் தான் அது
செயல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
யுத்த வெற்றி நிகழ்வு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அவர் பங்கெடுத்துவிட்டு யுத்த வெற்றி
நிகழ்வில் பங்கெடுத்திருந்தால் இனவாதம் இல்லாது, பக்கச் சார்பு இல்லாது தனது
முன்னகர்வை கொண்டு செல்கின்றார் என நாங்கள் நம்ப முடியும்.
ஆனால் அவர் அவ்வாறு
அல்ல.
அதாவது இந்த கோர யுத்ததில் கொல்லப்பட்ட இலட்சக்கணக்கானோரின் உறவுகள்
முள்ளிவாய்க்கால் மண்ணில் கண்ணீர் விட்டு கதறுகின்ற போது அவை எவற்றையும்
கண்டு கொள்ளாமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ஆறுதல் கூறாமல், வெறுமனே யுத்த
வெற்றி நிகழ்வில் கலந்து கொண்டுவிட்டு, வடக்கிலும் தெற்கிலும் இனவாதம்
மேலெழுந்துவிட்டதாக சொல்வது வேதனையான விடயம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு,
ஜனாதிபதி என்ற வகையில் என்ன செய்யப்போகின்றார் என்பதையும் தெளிவாக சொல்லவில்லை.
பாதிக்கப்பட்ட மக்கள் விவகாரத்தில் ஒரு காத்திரமான முடிவு சொல்வதில் அவர்
தெளிவாக இல்லை.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
தானும் ஒரு பாதிக்கப்பட்டவன் என்ற வகையில் தான் அவர்
கருத்துரைக்கின்றார்.
காணாமல் ஆக்கப்பட்டோரது விவகாரம் தொடர்பாக எவ்வாறு நீதி வழங்கவுள்ளீர்கள் என
வினவிய வேளை, தன்னுடைய சகோதரனும் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டதாகவும், தானும்
அந்த வலியையும் வேதனையையும் உணர்வதாக கூறியுள்ளார்.
அவர் ஜனாதிபதியாக
வருவதற்கு முதல் இவ்வாறு கதைப்பது ஏற்புடையதா இருக்கும். ஆனால் ஜனாதிபதியாக
வந்த பின்னர் எப்படியான நீதியை வழங்குவேன் என அவர் சொல்லியிருக்க வேண்டும்.
நாட்டில் அமைதி ஏற்படவில்லை என்றால் அந்த அமைதிக்கு தடையான காரணிகள் என்ன்
என்பதை கண்டறிந்து, அதற்கு எவ்வாறு தீர்வு வழங்க வேண்டும் என்பதனை ஜனாதிபதி
தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதி இதுவரை அவ்வாறான முடிவுக்கு
துணிச்சலாக இறங்கி வரவில்லை” என அவர் குற்றம்சாட்டினார்.
