கடுமையான தீர்மானங்களை எடுத்து நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டது போன்றே, வெள்ளம் மற்றும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முடிவுகளையும் எடுக்க வேண்டும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
கொழும்பபில் நடைபெற்ற இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் கொழும்புக் கிளையால் நடத்தப்படும் வெள்ள அபாயங்கள் மற்றும் டெங்கு ஒழிப்பு பிரச்சாரத்தின் ஆரம்ப நிகழ்வில் பங்குபற்றியபோதே சாகல ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கு கருத்து தெரிவித்த சாகல ரத்நாயக்க கூறியதாவது:
“அனர்த்தம் ஏற்படும் சந்தர்ப்பத்தில், அரசாங்கம், பல்வேறு அமைப்புகள், நாடுகள் பெருமளவில் பணம் செலவிட வேண்டியுள்ளது.
சுகாதார சேவை
வெள்ள நிலை ஏற்படுவதற்கு முன்பே அதைத் தணிக்க நடவடிக்கை எடுத்தால், வெள்ளச் நிலைமையில் நாம் செலவழிப்பதை விட அதிகப் பணத்தைச் சேமிக்க முடியும்.
மேலும், டெங்குவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கான செலவு, டெங்கு நோய்க்கான சுகாதார சேவைகளின் செலவை விட மிகக் குறைவாக இருக்கும் என்பதையும் கூற வேண்டும்.
உயிரிழப்பு மற்றும் குடும்ப உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பணத்தால் மதிப்பிட முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இவை அனைத்தையும் பற்றி சரியான முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் ஏற்பட்டுள்ளது. இந்த முடிவுகள் பலர் அறியப்படாத ஒன்றாக இருக்கலாம். எனினும், சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். கடுமையான முடிவுகளை எடுத்ததால்தான் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாம் மீண்டு வர முடிந்தது.
அத்தகைய முடிவுகளின் பலனை சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் கண்டுகொள்ள முடியும்.
கட்டமைப்பு ரீதியிலான சீர்திருத்தம்
நாம் செய்த கட்டமைப்பு ரீதியிலான மறுசீரமைப்புகள் காரணமாக, வர்த்தகம், தொழில்துறை மற்றும் முதலீடுகளை மேற்கொள்ள முடிந்தது. தற்போதைய அரசாங்கம் மோசடி மற்றும் ஊழலைக் குறைப்பதற்கான கட்டமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்களையும் மேற்கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் பிரபல்யமானதாக இருக்கவில்லை. ஆனால் இலங்கையில் தேர்தல்கள் நெருங்கும் போது பிரபலமான முடிவுகளை எடுப்பதே வழக்கமாக இருந்துள்ளது.
ஆனாலும், வெள்ளம், டெங்கு போன்ற பிரச்சினைகளில் பிரபல்யமற்ற கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.
கடந்த அனர்த்த நிலைமைகளின்போது, எமது நாட்டின் பொறிமுறை, மக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் அந்த அனர்த்த நிலைமைக்கு பெரிதும் தாக்கம் செலுத்தியுள்ளமையை கண்டுகொள்ள முடிந்தது.
அதன்படி தவறான இடத்தில் வீடு கட்டப்பட்டு, வடிகால்கள் அடைக்கப்பட்டு, சிலர் வயல் நிலங்களை நிரப்பி தங்கள் வீட்டிற்கு செல்ல வீதிகளை அமைத்திருப்பதையும் காண முடிகிறது.
நகரில் தேங்கியுள்ள நீர் வெளியேற முடியாமல் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.