Home ஏனையவை ஆன்மீகம் இலங்கையில் உள்ள சுவிற்சர்லாந்து தூதரகத்தில் சைவநெறிக்கூடம் சந்திப்பு

இலங்கையில் உள்ள சுவிற்சர்லாந்து தூதரகத்தில் சைவநெறிக்கூடம் சந்திப்பு

0

அம்பாறையில் (Ampara) வளத்தாப்பிட்டியில் சைவநெறிக்கூடம் கடந்த 15ஆம் திகதி செந்தமிழ் திருமறையில் தனது 5ஆவது தமிழ்வழிபாட்டுக் கோவிலாக அருள்ஞானமிகு ஆதிசக்தி உடனாய ஆதிசிவன் திருக்கோவிலை உறுப்பு அமைப்பாக இணைத்துக் கொண்டு திருக்குடமுழுக்கு ஆற்றிவைத்தது.

பல்சமய இல்லத்தில் உறுப்பினராக உள்ள சைவநெறிக்கூடத்தின் செயற்பாட்டினை கேட்டறியவும், இலங்கையில் வாய்ப்புள்ள நற்திட்டங்களை கூட்டாக நடைமுறைப்படுத்தவும் சுவிற்சர்லாந்துக்கான (Switzerland) தூதுவர் சீரி வல்ரெர் சைவநெறிக்கூடத்தினை நேரில் கண்டு பேச தூதரகத்திற்கு அழைத்திருந்தார்.

இந்த ஒன்றுகூடலில் தூதுவருடன் யஸ்ரின் பொய்லாற் மற்றும் திருநிறை. டோறிஸ் மனோர் ஆகிய பணிப்பாளர்களும் உடனிருந்தனர்.

சைவநெறிக்கூடத்தின் சார்பாளராக சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் சென்றிருந்தார்.

சீர்திருத்த சைவ எழுச்சி

சைவநெறிக்கூடம் சென்றது போக கருவறையில் ஆற்றும் செந்தமிழ் வழிபாட்டுத்தீர்மானம், அனைவரும் அருட்சுனையர் ஆகலாம் எனும் கோட்பாடு, குடிமைப்பாகுபாடு (சாதி) மறுப்பு, பெண்களும் அருட்சுனையராகலாம் எனும் முறைமை, அனைத்து மாந்தரும் கருவறை வரை சென்று வழிபடும் சீர்திருத்த சைவ எழுச்சி, சிவருசி. சசிக்குமாரால் சுவிற்சர்லாந்து தூதருக்கு விளக்கப்பட்டது.

பெரும் போர் பேரிடரிற்குப் பின்னர் தமிழ்மக்களின் நிலம், வழிபாட்டு இடங்கள், கோவில்கள் பலவகையில் வல்வளைப்பிற்கு ஆளாகுவதை தடுக்கும் பணிகளுக்கு சுவிஸ் அரசு தானாக முன்வந்து வெளிப்படையாக செயலாற்ற வேண்டும் எனும் கோரிக்கையினை சைவநெறிக்கூடம் தூதுவரிடம் முன்வைத்தது.

நுழைவு விசா

இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகம் கொழும்பு நகரத்தில் அமைந்துள்ளது.

இது இரு நாடுகளுக்கும் இடையேயான நெருக்கமான உறவுகளை மேம்படுத்தும் முக்கிய நிலையமாகும்.

மேலும் விசா விண்ணப்பங்கள், குடிவரவு தொடர்பான உதவிகள் மற்றும் இலங்கையில் உள்ள சுவிற்சர்லாந்து குடிமக்களுக்கு உதவிகள் போன்ற பணிகளை வழங்குகின்றது.

சைவத்திருக்கோவில் பணிகளுக்கு ஈழத்திலிருந்து சுவிஸ் வருகை தரும் அர்ச்சகர்கள், இசைக்கலைஞர்களுக்கு நுழைவு விசாவினை இலகுபடுத்தவும் வேண்டுகை சைவநெறிக்கூடத்தால் முன்வைக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version