கோட்டாபய ராஜபக்சவின் பொருளாதார வேலைத்திட்டத்தையே சஜித்தும் அநுரவும் நடைமுறைப்படுத்தத் தயாராகி வருகின்றனர் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மொனராகலையில் நேற்று (29) பிற்பகல் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி
மேலும் தெரிவிக்கையில், “இன்று ஒரே கூட்டத்துக்காக கூடியிருக்கும் மக்கள் கடந்த காலங்களில் ஒவ்வொரு குழுக்களுக்கு ஆதரவளித்தனர். இன்று அனைவரும் ஒரு மேடையில் இருக்கின்றனர். இவர்கள் எவரும் கட்சி மாறவில்லை.ஆனால், 2022 ஆம் ஆண்டிலே அனைவரும் வாழ்க்கைச் சவால்களை எதிர்கொண்டோம்.
எந்தவொரு கட்சியினருக்கும் அந்த கஷ்டங்கள் வெவ்வேறாக இருக்கவில்லை. அனைத்து கட்சியினரும் வரிசையில் அவதிப்பட்டனர். அதனாலேயே இன்று அனைவரும் இந்த மேடையில் உள்ளனர்.
சிலர் வருமானத்தை இழந்து தவித்தனர். எனவே, நாம் நாட்டைக் காப்பாற்ற ஒற்றுமையாக பயணிக்க வேண்டியது அவசியமாகும். அதற்காகவே அரசும் ஒற்றுமையாக பயணித்தது. நாட்டை மீட்பதற்காக நாங்கள் ஒன்றுபட்டோம்.
நெருக்கடி காலத்தில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி 15 சதவீதமாகக் குறைந்து போனது. உற்பத்தியை அதிகரிக்க வேண்டியிருந்தது. கிரீஸ் இவ்வாறுதான் சரிவை கண்டது. இலங்கைக்கும் அந்த நிலை ஏற்பட இடமளிக்காமல் நான் அமெரிக்கா, உலக வங்கியுடன் பேசி உரத்தைப் பெற்றுக்கொண்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் சிறுபோகத்துக்கு உரம் பெற்றுக்கொடுத்தோம்.
2023 இல் பெரும்போகத்துக்கு உரம் கொடுத்தோம். 4 போகங்கள் சாத்தியமாக நடந்தன.
அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு
அதேபோல் பழங்கள், மரக்கறி விளைச்சலும் கிடைத்தது. அதன் பலனாக மொத்த தேசிய உற்பத்தி அதிகரித்தது. தொழிற்சாலைகள் முடங்கி கிடந்த வேளையில் விவசாயத்தை மேம்படுத்த முடிந்தது. நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைத்தன்மையை பாதுகாக்கவே ஜனாதிபதித் தேர்தலை நடத்துகின்றோம். உரிய தீர்மானத்தை மக்கள் எடுக்க வேண்டும்.
ஜே.வி.பி.யிடமோ ஐக்கிய மக்கள் சக்தியிடமோ நாட்டின் முன்றேற்றத்துக்கான திட்டம் இல்லை. அதனால் வாழ்க்கைச் செலவைக் குறைக்க வரியைக் குறைப்போம் என்கின்றனர். அப்படிச் செய்தால் அரசாங்க வருமானம் குறையும். அவ்வாறு செய்துவிட்டு பழைய நிலைக்கே திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவும் அதனையே செய்தார். சஜித்தும் அநுரவும் அதனையே செய்யப்போதாகச் சொல்கின்றார்கள். அப்படியாயின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விரட்டியடித்தது அர்த்தமற்றதாகிவிடும்.
எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டில் பொருளாதாரம் வலுவடைந்ததால் மக்களுக்கு ஓரளவு சலுகை வழங்கினோம். அதனால் அரச ஊழியர்களுக்கு 10 சம்பள அதிகரிப்பை இரண்டு கட்டங்களின் கீழ் வழங்கினோம்.
உதய செனவிரத்ன அறிக்கையின் பிரகாரம் அடுத்த ஆண்டிலும் சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளது.
இளையோருக்கு வேலைவாய்ப்புக்கள்
நான் பொய் வாக்குறுதிகளை ஒருபோதும் சொல்லமாட்டேன். நாட்டில் வளர்ச்சி ஏற்படும்போது சம்பளம் அதிகரிக்கும். பொருட்களின் விலையும் குறையும். 2025 – 2026 எவ்வாறு சலுகை கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். 2026 இறுதி காலாண்டில் சலுகைகள் அதிகளவில் கிடைக்கும்.
அரச ஊழியர்கள் பல நெருக்கடிக்கு முகம்கொடுத்தனர். இன்று ஓரளவு மொத்த தேசிய உற்பத்தி அதிகரிக்கிறது. 2022 – 2023 கஷ்டங்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். இனி இளையோருக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவோம். சுய தொழில் பயிற்சியை பெறவும் நிதிச் சலுகை வழங்குவோம்.
பொருளாதார மேம்பாட்டை உருவாக்கவும் வழி செய்வோம். இந்த அரசில் தீர்க்க முடியாமல் போன பிரச்சினைகளுக்கு அடுத்த முறை விரைவில் தீர்வு தருவோம்.
குளங்களை மறுசீரமைத்து காணிகளைப் பகிர்ந்தளித்து நாம் விவசாயத்தைப் பலப்படுத்துவோம். உமா ஓயா வேலைத்திட்டத்தை நிறைவு செய்ய வேண்டியுள்ளது.
5 வருடங்கள் இப்பகுதி மக்களுக்கு வசதிகளை தந்து அவகாசம் தருகின்றேன். நீங்கள் விளைச்சலை அதிகரிக்க வேண்டும்.
இந்நிலையில், நாட்டை முன்நோக்கி நகர்த்த எதிர்வரும் செப்டெம்பர் 21 சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது தண்ணீரும் இருக்காது” என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.