டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ரஷ்யாவின் ஆதரவை வழங்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
சேதமடைந்த ரயில் மற்றும் சாலை கட்டமைப்புகளை சீரமைக்கவும் உதவுமாறு அவர் கோரியுள்ளார்.
இலங்கைக்கான ரஷ்ய தூதர் லெவான் ஜகாரியன் மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் இன்று இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சிறப்பு சந்திப்பு கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
சந்திப்பின் போது, டிட்வா புயலினால் மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை விவரித்து, பேரிடர் பாதிப்புக்குள்ளான குடும்பங்களின் வாழ்க்கையை மீள கட்டியெழுப்புவதற்கு உதவி வழங்குமாறு சஜித் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், இந்த நெருக்கடியான சூழ்நிலையில் ஏற்கனவே வழங்கிய உதவிக்கு இலங்கை மக்களின் சார்பில் நன்றி பாராட்டியுள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால வர்த்தக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது அவசியம் எனவும், அத்தகைய ஒத்துழைப்பு இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு மிகுந்த ஆதரவாக இருக்கும் எனவும் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
