ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(sajith premadasa) தமிழ்க் கட்சிப் பிரதிநிதிகளுக்கு வாக்குறுதியளித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்(selvam adaikkalanathan) நேற்று (14) தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல தமிழ் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய குழு ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கொழும்பில் சந்தித்ததன் பின்னர் செல்வம் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முதல் தடவையாக ஜனாதிபதியாக பதவி
தாம் இதுவரையில் நாட்டின் பிரதமர் அல்லது ஜனாதிபதி பதவிகளை வகிக்கவில்லை எனவும், முதல் தடவையாக ஜனாதிபதியாக பதவியேற்க தான் முன்மொழியப்பட்டதாகவும் சஜித் பிரேமதாச தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.
தான் வெற்றி பெற்றால் இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களின் சகல பிரச்சினைகளையும் அரசியலமைப்புக்கு பாதிப்பின்றி தீர்த்து வைப்பேன் என உறுதியளித்துள்ளார்.
தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாகாண சபை முறைமையை பயன்படுத்தி அந்த மாகாண சபைகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்க எதிர்பார்த்துள்ளதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விசேட செயலணி
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விசேட செயலணியொன்றை அமைத்து தனது நேரடிக் கண்காணிப்பில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்குவதாக உறுதியளித்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாகவே சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்குமாறு கோரிய போதிலும் கலந்துரையாடலில் கலந்துகொண்ட தமிழ் கட்சி பிரதிநிதிகள் தமது கோரிக்கை தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இந்தகலந்துரையாடலில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் மற்றும் சுரேன் குருசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
https://www.youtube.com/embed/9WgpoNP06Yk