Home சினிமா சங்கராந்திகி வஸ்துனம்: திரை விமர்சனம்

சங்கராந்திகி வஸ்துனம்: திரை விமர்சனம்

0

வெங்கடேஷ், மீனாக்ஷி சௌத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள சங்கராந்திக்கி வஸ்துனம் திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.

கதைக்களம்

வெங்கடேஷ் தனது மனைவி ஐஸ்வர்யா ராஜேஷ், 4 குழந்தைகளுடன் மாமனார் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.

அதே சமயம் வெளிநாட்டில் இருந்து வரும் பெரிய கம்பெனி ஒன்றின் சிஇஓ அகெல்லா (ஸ்ரீனிவாஸ்) மாநில முதல்வர் நரேஷை சந்திக்கிறார்.

பிறகு அவர் டெல்லிக்கு செல்ல வேண்டிய சூழலில் கட்சித்தலைவர் விடிவி கணேஷ் விருந்து ஏற்பாடு செய்வதாகவும், அதனால் தங்கிவிட்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ள முதல்வர் கெஸ்ட் ஹவுசில் அகெல்லா தங்குகிறார்.

ஐபிஎஸ் அதிகாரியான மீனாக்ஷி காவலுக்கு இருக்கும்போது ரௌடி கும்பல் ஒன்று அங்கே வந்து அகெல்லாவை கடத்தி செல்கின்றனர்.

இந்த கடத்தல் வெளியில் தெரியாமல் சிஇஓ மீட்கப்பட வேண்டும், அதற்கு சரியான அதிகாரி யார் என்று முதல்வர் கேட்க என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெங்கடேஷ்தான் அதற்கு சரியாக இருப்பார் என்று கமிஷனர் கூறுகிறார்.

ஆனால் வேலையை விட்டு சென்றுவிட்ட அவரை யார் அழைத்து வருவது என்ற கேள்வி எழும்ப, தனது முன்னாள் காதலர்தான் அவர் எனக் கூறி மீனாக்ஷி கிளம்புகிறார்.

வெங்கடேஷை பார்க்க செல்லும் மீனாக்ஷி அவர் குடும்பத்துடன் வாழ்ந்து வருவதைப் பார்த்து ஷாக் ஆகிறார்.

எனினும் அவரையும் மனைவி, குழந்தை, மாமனார் ஆகியோரையும் அழைத்துக் கொண்டு மிஷனில் இறங்குகிறார் மீனாக்ஷி.

அதன் பின்னர் சிஇஓவை எப்படி மீட்டார்கள்? அவர்கள் அதில் சந்தித்த சிக்கல்கள் என்ன என்பதே படத்தின் கதை.
 

படம் பற்றிய அலசல்

மகேஷ் பாபுவை வைத்து ‘சரிலேரு நீக்கெவ்வரு’ படத்தைக் கொடுத்த அனில் ரவிப்புடிதான் இப்படத்தை இயக்கியுள்ளார்.

வெங்கடேஷிற்கு காமெடி கலாட்டா கதை என்றால் அல்வா சாப்பிடுவதுபோல். அந்த வகையில் லெஃப்ட் ஹெண்டில் டீல் செய்திருக்கிறார்.

படம் முழுக்க காமெடி சரவெடிதான். படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நகைச்சுவை செய்யும் வகையிலேயே எழுதப்பட்டிருக்கிறது.

குறிப்பாக வெங்கடேஷின் மூத்த பையனாக நடித்திருக்கும் சிறுவனின் ரோல்தான் ஹைலைட்.

தன் அப்பாவை யாராவது தப்பாக பேசினால் தாத்தா என்றும் பாராமல் கெட்டவார்த்தையால் திட்டுக்கிறார்.

இது அபத்தமான விஷயம்தான் என்றாலும் காட்சியுடன் ஒன்றிப் பார்க்க சிரிப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை.

மீனாக்ஷி முதல் காட்சியிலேயே அட்டகாசமான சண்டைக்காட்சியில் மிரட்டுகிறார். ஆனால் ஹீரோ வெங்கடேஷ் கிளைமேக்ஸ் வரை சண்டைப்போடுவாரா என்ற கேள்வி நீடிக்கும் வகையில் காட்சிகள் நகர்கின்றன.

காதலிக்க நேரமில்லை திரை விமர்சனம்

ஆனாலும் கிளைமேக்ஸ் காட்சியில் காமெடி பண்ணாலும் நான் ஆக்ஷன் ஹீரோதான் என்று காட்டிவிடுகிறார்.

மனைவியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்திற்கு சாப்பாடு கொடுக்கும் காட்சிக்கு அரங்கில் சிரிப்பு சத்தம் நிற்க நீண்ட நேரமாகிறது.

நரேஷ், விடிவி கணேஷ், சாய்குமார் ஆகியோரும் நம்மை சிரிக்க வைக்க தவறவில்லை.

படத்தில் மிகப்பெரிய காமெடி பிளாஸ்ட் இன்டர்வல் பிளாக்தான். என்னதான் காமெடி படமாக இருந்தாலும் வெங்கடேஷ் அந்த காட்சிக்கு ஒப்புக்கொண்டது பெரிய விஷயம்.

படம் முழுக்க காமெடியாக இருந்தாலும் ஆங்காங்கே வரும் பாடல்கள் உறுத்தல் இல்லாமல் இருப்பதால் ரசிக்க முடிகிறது. குறிப்பாக முதல் பாடல் சிறப்பு.

மராத்தி நடிகர் உப்பெந்திரா லிமயே சில இடங்களில் செய்யும் விஷயங்கள் கிரிஞ்ச் ஆக தெரிகிறது. 

க்ளாப்ஸ்

படம் முழுக்க ஒர்க்அவுட் ஆன காமெடி காட்சிகள்

வசனங்கள்

அனைவரின் நடிப்பு

பாடல்கள்

பல்ப்ஸ்

சிறுவன் கெட்டவார்த்தையில் பெரியவர்களை திட்டுவது

லாஜிக் மீறல்கள்

மொத்தத்தில் குடும்பத்துடன் ஜாலியாக ஒரு படம் பார்க்கவேண்டுமென்றால் கண்டிப்பாக இப்படத்தைப் பார்க்கலாம். 

NO COMMENTS

Exit mobile version