Home இலங்கை அரசியல் திருவுளச்சீட்டு மூலம் சாவகச்சேரி நகர சபை ஆட்சி தமிழ்த் தேசியப் பேரவை வசம்!

திருவுளச்சீட்டு மூலம் சாவகச்சேரி நகர சபை ஆட்சி தமிழ்த் தேசியப் பேரவை வசம்!

0

திருவுளச்சீட்டு ஊடாக சாவகச்சேரி நகர சபையின் ஆட்சியை அகில இலங்கைத் தமிழ்க்
காங்கிரஸ் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை கைப்பற்றியுள்ளது.

சாவகச்சேரி நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுகள் இன்று
பிற்பகல் 3 மணியளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு
தலைமையில் நடைபெற்றது.

பகிரங்க வாக்கெடுப்பு 

தவிசாளர் பதவிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் அ.கைலாயபிள்ளையும்,
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை சார்பில்
வ.சிறிபிரகாஷும் முன்மொழியப்பட்டு பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தவிசாளர் வேட்பாளர் அ.கைலாயபிள்ளை தமிழரசுக் கட்சி மற்றும் ஈ.பி.டி.பி. உறுப்பினர்களுடைய ஆதரவுடன் 7 வாக்குகளைப்
பெற்றார்.

அதேநேரம் தமிழ்த் தேசியப் பேரவையின் தவிசாளர் வேட்பாளர் வ.சிறிபிரகாஷுக்கும் 7
வாக்குகள் கிடைத்தன.

அதன்பின்னர் திருவுளச்சீட்டு ஊடாக தவிசாளர் தெரிவு செய்யும் நடைமுறைக்குச்
செல்லப்பட்டதில் தமிழ்த் தேசியப் பேரவையின் தவிசாளர் வேட்பாளர் வ.சிறிபிரகாஷ்
தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

திருவுளச்சீட்டு நடைமுறை

மேலும் உப தவிசாளர் தெரிவிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில்
அ.பாலமயூரனும், தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் ஞா.கிஷோரும் போட்டியிட்டு சம
வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில் திருவுளச்சீட்டு மூலம் தமிழ்த் தேசியப்
பேரவையின் உறுப்பினர் கிஷோர் தெரிவு செய்யப்பட்டார்.

வாக்கெடுப்பின் போது தேசிய மக்கள் சக்தி நடுநிலைமை வகித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையின்
சார்பில் சாவகச்சேரி நகர சபைக்குப் பிரேரிக்கப்பட்ட பெண் உறுப்பினர்
ஒருவருக்கு உயர்நீதிமன்றத்தால் இன்று இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்த
நிலையிலேயே திருவுளச்சீட்டு நடைமுறை வரை செல்ல வேண்டியிருந்தமை
குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version