மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தை
ஸ்கான் பரிசோதனை மேற்கொள்வதற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இன்னும்
கிடைக்காத காரணத்தால் ஸ்கான் பரிசோதனை தாமதமடைந்துள்ளது.
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தின் அபிவிருத்திப் பணிகளின் போது மனித
என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய இதுவரை
மொத்தமாக 32 நாட்கள் இடம்பெற்ற அகழ்வுப் பணிகளில் 104 மனித என்புத் தொகுதிகள்
அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஸ்கான் பரிசோதனை
இந்நிலையில் மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட சித்துப்பாத்தி இந்து மயான
எல்லையைச் சூழ ஸ்கான் பரிசோதனை மேற்கொள்வதற்கான முதல் கட்டமாக கடந்த
வெள்ளிக்கிழமை துப்பரவுப் பணிகள் இடம்பெற்றன.
நேற்று திங்கட்கிழமை ஸ்கான் பரிசோதனை மேற்கொள்வதற்கான பாதுகாப்பு அமைச்சின்
அனுமதி கிடைக்கப் பெறும் என எதிர்பார்த்தபோதும் நேற்று மாலை வரை அனுமதி
கிடைக்கவில்லை.
இதனால் ஸ்கான் பரிசோதனை தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
