இவ்வருடம் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் சில கேள்விகளை கசியவிட்டதாக கூறப்படும் மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் மற்றும் பாடசாலை ஆசிரியரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவானது இன்று (07) கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் வட்ஸ்அப் ஊடாக பரிமாறப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
பரீட்சைகள் திணைக்களம்
இந்தநிலையில், வினாத்தாள் கசிந்ததுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து பரீட்சைகள் திணைக்களம் கடந்த 17 ஆம் திகதி விசாரணைகளை நடத்தியது.
இதையடுத்து, புலமைப்பரிசில் வினாத்தாளில் இருந்து மூன்று வினாக்களை நீக்கி அனைத்து மாணவர்களுக்கும் அந்த மூன்று வினாக்களின் மதிப்பெண்களை சமமாக வழங்க தீர்மானிக்கப்பட்டது.
அத்தோடு, பரீட்சையின் வினாத்தாளைப் புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் ஊடாக பகிர்ந்த பாடசாலை அதிபரும் ஆறு ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்திருந்தது.
இருவருக்கும் விளக்கமறியல்
இதனை தொடர்ந்து மஹரகம, தேசிய கல்வி நிறுவகத்தில் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபரை சந்தேகநபர் கடந்த (23) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இவரை தொடர்ந்து புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் பகுதி ஒன்றின் மூன்று வினாக்களை வட்ஸ்அப் ஊடாக பகிர்ந்ததாக கூறப்படும் புலமைப்பரிசில் ஆசிரியர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கடந்த 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில், இவர்கள் இருவரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தற்போது உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.