Home இலங்கை அரசியல் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் நியமனம் : சுரேஷ் பிரேமச்சந்திரனின் அறிவிப்பு

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் நியமனம் : சுரேஷ் பிரேமச்சந்திரனின் அறிவிப்பு

0

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு (DTNA)  தலைவரை நியமிப்பது தொடர்பில் திட்டமிட்டிருப்பதாக உறுதி கோராத செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக அந்தக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த செய்தியில் உண்மை இல்லை என்றும் இது தென்னிலங்கை அரசியல் சக்திகளின் சதி என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று (15) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செல்வம் அடைக்கலநாதனை நியமிக்க தீர்மானம் 

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இலத்திரனியல் ஊடகங்களிலும், அச்சு ஊடகங்களிலும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவராக செல்வம் அடைக்கலநாதனை (Selvam Adaikalanathan) நியமிப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாக கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் தெரிவித்ததாக ஓர் அனாமதேய செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அனாமதேய செய்தி தொடர்பாக கட்சியின் பேச்சாளர் என்ற வகையில் ஊடகப்பரப்பில் இருப்பவர்கள் என்னுடன் தொடர்புகொண்டு அந்த செய்தி தொடர்பான கருத்துக்களைக் கேட்டிருந்தனர்.

இந்த விடயம் தொடர்பாக இதுவரை நடைபெற்ற கூட்டங்கள் எதிலும் கலந்துரையாடப்படவில்லை என்பதையும் அத்தகைய எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதுடன் எமது யாப்பில் சில மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பிலேயே விவாதித்திருந்தோம் என்பதையும் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

தமிழ் மக்களின் எதிர்காலம்

அதேநேரம் ஆளும்தரப்பு முக்கியஸ்தர்கள் சிலர் தமிழ் கட்சிகள் தனித்தனியே நின்று தீர்வுக்கான கருத்துகளைக் கூறாமல், ஒன்றுபட்டு ஒரே கருத்தைக் கூறுவார்களாக இருந்தால் அது தொடர்பில் பேசலாம் என்றும் செய்திகளை வெளியிட்டு வருகின்றார்கள்.

இது ஒரு வகையில் தமிழ்த் தரப்பின்மீது குற்றங்களைச் சுமத்தி தீர்வினை எட்டாமல் செய்வதற்கான அரசின் சாதுர்யமான பிரித்தாளும் தந்திரோபத்தையே காட்டுகிறது.

இத்தகைய ஒரு சூழ்நிலையில் தமிழ்த் தரப்புகள் அவதானமாகவும் ஒன்றுபட்டும் செயற்பட வேண்டியதன் அவசியத்தை தமிழ் அரசியல் பரப்பில் உள்ளோர் புரிந்துகொள்ள வேண்டும்.

குறுகிய கட்சி நலன்களைக் கைவிட்டு, தமிழ் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பது தொடர்பான காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற சக்திகளாகவும் வலுவான சக்திகளாகவும் தங்களை தகவமைத்துக் கொள்வதற்கான காலச்சூழல் ஏற்பட்டிருப்பதாகக் கருதுகின்றோம்.

இதனைப் பற்றிப்பிடித்து அனைவரும் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version