தமிழ் மக்களுக்குரிய 20 ஏக்கருக்கும் மேற்பட்ட பூர்விக தனியார் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கூறியுள்ளார்.
இவ்வாறாக எமது தமிழ்மக்களின் காணிகளை அபகரித்து, கொக்கிளாய் முகத்துவாரத்தில் தங்கியுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் தற்போது அனர்த்தப் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் எனத் தெரிவித்து, அவர்களுக்கு கொக்குத்தொடுவாயில் காணிகளை வழங்குவதற்கு எடுக்கின்ற முயற்சியை மிகக் கடுமையாக எதிர்க்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் மக்களுக்குரிய காணிகள்
கடந்த 1984ஆம் ஆண்டு கொக்கிளாய் முகத்துவாரத்தில் வசித்த தமிழ்மக்கள் இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பிறகு, எமது தமிழ் மக்களின் பூர்விக வாழிடங்களை ஆக்கிரமித்து பெரும்பான்மையின கடற்றொழிலாளர்கள் குடியேறினர்.
எமது தமிழ் மக்களுக்குரிய 20 ஏக்கருக்கும் மேற்பட்ட பூர்விக தனியார் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு இவ்வாறே பெரும்பான்மை இனத்தவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். அந்த காணிகளுக்குரிய தமிழ் மக்களின் பெயர்ப்பட்டியலும் எம்மிடம் உள்ளது.
இவ்வாறு கொக்கிளாய் முகத்துவாரத்தில் அமைந்துள்ள எமது தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்து குடியேறியிருக்கின்ற சிங்கள மக்களுக்கு நீர்கொழும்பு, சிலாபம் உள்ளிட்ட அவர்களுடைய சொந்த இடங்களிலும் காணிகள், வீடுகள் காணப்படுகின்றன.
ஒருவருக்கு ஒரு இடத்தில் காணியிருக்கலாம் என்பதே அரச கொள்கையாகும். இவ்வாறு சிலாபம், நீர்கொழும்புப் பகுதிகளில் இந்த பொரும்பான்மை இனத்தவர்களுக்கு காணி இருக்கத்தக்கதாக இங்கும், காணிகளை வழங்கமுடியுமா என்பதற்கு உரியவர்கள் பதிலளிக்கவேண்டும்.
கொக்குத்தொடுவாய் காணி
இந்த விடயத்தில் நியாயமான முறையில் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறாக எமது தமிழ்மக்களின் காணிகளை அபகரித்து, கொக்கிளாய் முகத்துவாரத்தில் தங்கியுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் தற்போது அனர்த்தப் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் எனத் தெரிவித்து, அவர்களுக்கு கொக்குத்தொடுவாயில் காணிகளை வழங்குவதற்கு எடுக்கின்ற முயற்சியை மிகக் கடுமையாக எதிர்க்கின்றேன்.
அத்தோடு புலிபாய்ந்தகல்லில் சுற்றுலாத்தளத்துக்கென ஒதுக்கப்பட்ட காணிகளையும் ஆக்கிரமித்து, அங்கு அத்துமீறி கடற்றொழில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு பெரும்பான்மை இனத்தவர்கள் எடுக்கின்ற முயற்சியினையும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
கடந்த காலத்தில் தமிழர்களின் பூர்விக மணலாற்றுப் பகுதிக் காணிகளை முன்னைய அரசாங்கங்கள் அடாவடியாக ஆக்கிரமித்து பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பகிர்ந்தளித்திருந்தனர்.
இந்நிலையில் முன்னைய அரசாங்கங்களைப் போன்று இந்த அரசாங்கமும் அடாவடியாகச் செயற்படாதீர்கள் எனக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்” என கூறியுள்ளார்.
