கல்முனை பிரதேச செயலக விடயம் தேர்தலுக்கு முன்னர் தீர்க்கப்பட வாய்ப்புக்கள் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan) எனும் இயற் பெயருடைய பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு(Batticaloa) – களுவாஞ்சிகுடி பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட போதே அவர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கல்முனை பிரதேச செயலக விவகாரம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கல்முனை பிரதேச செயலக விடயத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்
நிலைப்பாடும், எனது நிலைப்பாடும் உறுதியானது.
அங்கிருக்கின்ற தமிழர்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய நிர்வாக அலகு ஒன்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அதில்
எதுவித குழப்பமும் இல்லை.
எனினும் இப்போதிருக்கின்ற சூழல் ஒரு சாத்தியம் இல்லாத
சூழலை உருவாக்கியிருக்கின்றது.
அம்பாறை மாவட்டத்திலிருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிராக
போர்க்கொடி தூக்குகின்றார்கள்.
இதனை எப்படியாவது காலத்தை இழுத்தடிக்க வேண்டும்,
எனும் நோக்குடன் சில அரசியல் ரீதியான அழுத்தங்களும் பிரயோகித்து வருகின்றார்கள்.
கொள்கை ரீதியாக அந்த பிரதேச செயலகத்திற்கு ஆகக் குறைந்தது கணக்காளரையாவது
நியமிக்க வேண்டும் என்பதில் உதியாக சில விடயங்கள் நடைபெற்றுள்ளன.
தேர்தலுக்கு முன்னர் சில விடயங்கள் தீர்க்கப்பட வேண்டிய வாய்ப்புக்கள் உள்ளன. அதற்குரிய
உதவிகளையும் நாங்கள் செய்திருக்கின்றோம்.” என அவர் தெரிவித்துள்ளார்.