அண்மையில் நியமிக்கப்பட்ட ஆறு பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவு தேவையில்லை என்று சபாநாயகருக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
அதன்படி, எரங்க குணசேகர, அரவிந்த செனரத், தினிந்து சமன் குமார, நிஷாந்த ஜெயவீர, டாக்டர் கௌசல்ய அரியரத்ன மற்றும் எம்.எம்.ஐ. அர்காம் ஆகியோர் எரிபொருள் கொடுப்பனவு தேவையில்லை என்று அறிவித்துள்ளனர்.
முந்தைய அரசாங்கங்களில் பல அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள், அமைச்சர் பதவிக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவுக்கு கூடுதலாக, நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை பெற்றிருந்தனர்.
எரிபொருள் கொடுப்பனவு
இதேவேளை, தற்போது பிரதமர் உட்பட 48 அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை முன்னர் நிராகரித்திருந்தனர்.
இதேவேளை, ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு, மாதாந்த கொடுப்பனவுகளாக ரூ. 54,285, மாதாந்த வரவேற்பு கொடுப்பனவாக ரூ. 1,000, தொலைபேசிக் கொடுப்பனவாக ரூ. 50,000, போக்குவரத்துச் செலவுக் கொடுப்பனவாக ரூ. 15,000, அலுவலகக் கொடுப்பனவாக ரூ. 1,00,000 மற்றும் நாடாளுமன்ற வருகை கொடுப்பனவாக ரூ. 2,500 வழங்கப்படுகின்றன.
இவற்றுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையிலான தூரத்தின் அடிப்படையில் எரிபொருள் கொடுப்பனவும் வழங்கப்படுகிறது. அதேநேரம், தேசியப் பட்டியல் உறுப்பினர்களுக்கு மாதாந்தம் 419.76 லீற்றர் டீசல் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
