வன்னி மக்களின் நிலையை புரிந்து வைத்துள்ள ஒரு பெண்ணாக என்னை கருதும் வன்னி
மக்கள் எமக்கான ஆணையை வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா
மாவட்ட அமைப்பாளரும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளருமான ரசிகா
பிரியதர்சினி தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் (Vavuniya) இன்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து
தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வன்னி மாவட்டத்தில் அதிகமான மக்கள்
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்து தமது ஆதரவை
வழங்கியிருந்தார்கள்.
சஜித்துக்கு ஆதரவு
வன்னி மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையே அதற்கு
காரணம். அந்தவகையில் அந்த மக்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்
கொள்கின்றேன். அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலில் வன்னியில் எமக்கான
வாக்கினை மீள வழங்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் என நான் நம்புகின்றேன்.
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் ஒரு பெண் வேட்பாளராக உங்களில் ஒருவராக நான்
போட்டியிடுவதால் அந்த ஆணையை எனக்கு வழங்குவீர்கள் என நான் நம்புகின்றேன்.
ஒரு பெண்ணுக்கு தான் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள், குடும்ப சுமைகள் தெளிவாக
தெரியும். அது போல் வன்னி மக்களின் நிலமையை நான் நன்கு அறிந்து வைத்துள்ளேன்.
நான் இன்று அரசியலுக்கு வரவில்லை. அரசியலுக்கு வர முன்னரே மக்களுக்கான
சேவைகளை வழங்குகின்றேன். அதன் பின் தேர்தலில் போட்டியிட்டு நான் தோல்வியடைந்த
போதும் மக்களை விட்டுச்செல்லாது தொடந்தும் மக்களுக்கான சேவைகளை செய்து
வருகின்றேன். எனவே, எமக்கான ஆணை கிடைக்கும் என நம்புகின்றேன்” என தெரிவித்துள்ளார்.