கச்சத்தீவை ஒருபோதும் நாம் இந்தியாவுக்கு (India) விட்டுக்கொடுக்க மாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27.08.2025) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது தென்னிந்தியாவில் தேர்தல்காலம். எவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறி வருகின்றனர்.
அரசின் நிலைப்பாடு
அதனை நாம் பொருட்படுத்த தேவையில்லை. இராதந்திர மட்டத்தில் எவரும் கருத்து வெளியிட்டிருந்தால் அது குறித்து கவனம் செலுத்தலாம்.
ஆனால், இவ்வாறான கருத்துகளை நாம் பொருட்படுத்த தேவையில்லை.
கச்சத்தீவை இந்தியாவுக்கு நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கச்சத்தீவை மீட்டு தமிழக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு பிரதமர் மோடி தீர்வை வழங்க வேண்டும் என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தெரிவித்த விடயம் தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
