Home இலங்கை சமூகம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

0

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (Transnational Government of Tamil Eelam) வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில் இது குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தனது அமர்வை ஆரம்பிக்கவுள்ளது.

தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டவை

இந்த நிலையில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை என்பவற்றிற்காக இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளை கேட்டுக்கொள்கின்றது.

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் (International Criminal Court) பாரப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்துவதற்காக நாடு கடந்த தமிழீழ சமீபத்தில் நிகழ்நிலை நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வில் முன்னாள் யுத்த குற்ற நீதிபதி ஜெவ்ரி ரொபேர்ட்சன் (Geoffrey Robertson), அமெரிக்காவின் (US) யுத்த குற்ற அலுவலகத்தின் முன்னாள் தலைவர் தூதுவர் ஸ்டீபன் ரப் (Stephen Rubb) உட்பட பலர் கலந்துகொண்டனர்.

2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு (OHCHR) சமர்ப்பித்த அறிக்கையில் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு பரிந்துரை செய்திருந்தார்.

மனித உரிமை பேரவை

அவரின் இந்த வேண்டுகோளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் நான்கு முன்னாள் ஆணையாளர்களும், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு அறிக்கைகளை வெளியிட்ட 9 விசேட அறிக்கையாளர்களும், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் இலங்கை குறித்த நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றிருந்தவர்களும் மீள வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கு குறைவான எந்த நடவடிக்கையும், தமிழர்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட பாரிய அநீதிகளிற்கு நீதி கிடைப்பதற்கான வாய்ப்புகளை இல்லாமல் செய்துவிடும் என நாங்கள் கருதுகின்றோம்.

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்த தவறினால் அது தயக்கமின்றி தமிழர்களிற்கு எதிராக மேலும் அநீதிகளில் ஈடுபடுவதற்கான துணிச்சலை இலங்கையின் பாதுகாப்பு படையினருக்கும் அரசாங்கத்திற்கும் வழங்கும்.“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version