முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மீள்பரிசீலனை செய்வதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது என அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா(Harsha de Silva) தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் அரசாங்க நிதி குழுவின் அறிக்கைகளை சமர்ப்பித்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
சர்வதேச பரிவர்த்தனை
“2005 ஆம் ஆண்டு 28 ஆம் இலக்க மீட்பு சட்டத்தின் பிரகாரம் இலங்கையில் ஹவாலா மற்றும் உண்டியல் முறைமையிலான பண பரிமாற்ற முறைமைகள் சட்டவிரோதமானதல்ல, இருப்பினும் அது முறையாக கண்காணிக்கப்படுவதில்லை.
இந்த முறைமையின் மூலம் சர்வதேச பரிவர்த்தனைகளை மேற்கொள்பவர்கள் 2024 ஜூன் மாதம் முதல் 2025 மே மாதம் வரையிலான 12 மாத காலத்திற்குள் முறையாக பதிவு செய்ய வேண்டும் என்ற யோசனை முன்மொழியப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் முழுமையான மீளாய்வை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய வங்கியிடம் கோரினோம்.
ஹவாலா மற்றும் உண்டியல் முறைமை
இதற்கமைய ஹவாலா மற்றும் உண்டியல் முறைமை தொடர்பில் மத்திய வங்கி சமர்ப்பித்த அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கிறேன்.
கசினோ முறைமைக்கு கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அதன் செயற்பாடுகள் குறித்து பல சிக்கல்கள் காணப்படுகின்றன. முறையான கண்காணிப்புக்கள் ஏதும் கிடையாது 2002 ஆம் ஆண்டு ஒருசில ஒழுங்குவிதிகள் நிறைவேற்றப்பட்டன.
ஆகவே இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு நிதியமைச்சிடம் வலியுறுத்தியுள்ளோம்.