Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் சவால்களை எதிர்கொள்ளும் சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள்

முல்லைத்தீவில் சவால்களை எதிர்கொள்ளும் சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள்

0

Courtesy: uky(ஊகி)

முல்லைத்தீவில் (Mullaitivu) பன் பாய் உற்பத்தியில் ஈடுபடும் சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

மாவட்டச் செயலகத்தின் கிளை அலுவலகங்களில் ஒன்றாக இயங்கும் சிறுகைத்தொழில் அபிவிருத்திப் பிரிவினர் இது தொடர்பில் கூடிய கவனமெடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பப்படுகின்றது.

முல்லைத்தீவு கிச்சிராபுரம் பகுதியில் பன் பாய் உற்பத்தியில் ஈடுபட்டுவரும் தொழில் முயற்சியாளர்களின் செயற்பாடுகள் தொடர்பில் மேற்கொண்ட தேடலின் விளைவாக அவர்கள் எதிர் கொள்ளும் சவால்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

சிறுகதைத் தொழிலுக்கான இயந்திர வசதிகளை பெற்றுக்கொள்ள முடிகின்ற போதும் இயற்கையாக பிராந்தியங்களில் வளரக்கூடிய தாவர மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை நோக்கி சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் செல்வது கவலைக்குரிய விடயமாகும்.

பாரம்பரிய தொழில்

பன் பாய் உற்பத்தியில் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களை சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் ஆய்வொன்று முன்னெடுக்கப்பட்டது.

1980 ஆம் ஆண்டிலிருந்து பன் பாய் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் கிச்சிராபுரத்தைச் சேர்ந்த ஒருவருடன் உரையாடிய போது
அவர் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

பன் பாய் உற்பத்தியை அவருடன் இணைந்து பல குடும்பங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.அன்றிலிருந்து இன்று வரை இந்த முயற்சியை தாங்கள் கைவிடவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அவர்களின் வாழ்வாதாரமாக இது இருந்து வருவதோடு பிராந்தியத்தின் தேவைப்பாடு மிக்க தொழிலாகவும் பாய் உற்பத்தி அமைந்துள்ளது.

பனை ஓலைப் பாய், பன் பாய், பிரப்பம் பாய் உற்பத்திகளில் ஈடுபட்டு வந்திருந்த முல்லைத்தீவு வாழ் மக்களிடையே இப்போது அவற்றின் உற்பத்தியின் அளவு முன்பிருந்தது போல் இல்லை என இது தொடர்பில் பாய் விற்பனையாளர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.

மக்களிடையே இப்போதெல்லாம் பாய் உற்பத்தி ஒரு அடையாளமாகவே இருந்து வருகின்றது.ஒரு சிலரே தொழில் முறை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அருகிவரும் பன்புல் 

பன் பாய் உற்பத்தியில் ஈடுபடும் முயற்சியாளர்களுக்கு இருந்து வரும் மிகப் பாரிய சவாலாக பாய் இழைப்பதற்கு தேவையான பன்புற்களைப் பெற்றுக்கொள்வது இருக்கிறது.

போருக்கு முன்னர் போதியளவில் பெற்றுக்கொள்ள முடிந்த பன் புற்களை இப்போது பெற்றுக் கொள்ள முடியவில்லை.

பன் பாய் உற்பத்திக்கு தேவையான கல் பன்புல் என அழைக்கப்படும் பன்புல் உற்பத்தியாகும் இடங்கள் அழிக்கப்படுதலே இதற்கு பிரதான காரணமாக இருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் நந்திக்கடலின் மூன்றாம் கட்டைப் பாலத்திற்கு அண்மையில் உள்ள சதுப்பு நிலங்களில் அதிகளவில் கல்பன் புற்கள் வளர்கின்றன.

எனினும் அந்நிலங்களில் அதிகளவானவை வயல் நிலங்களாக மாற்றப்பட்டதுடன் சில பகுதிகளில் உள்ள பன்புற்கள் தேவையறியாது அழிக்கப்பட்டு வருவதாலும் இந்த பாரிய சவாலை அவர்கள் எதிர்கொள்ள நேரிடுவதை அறிய முடிகின்றது.

பாய் உற்பத்தியாளர்களுக்கு தேவையான பன்புற்களை பெற்றுக் கொடுப்பதில் சிறு கைத்தொழில் உற்பத்திக்கான பிராந்திய நிர்வாக அலகு தவறிவிட்டதையும் இங்கே சுட்டிக்காட்டல் பொருத்தமானதாகும்.

பன் புல்லை பெற்றுக்கொள்ள மன்னார் உயிலங்குளத்திற்கு சென்று அங்கிருந்து அவற்றை கொண்டு வந்து உற்பத்தியில் ஈடுபட்டிருந்த போதும் ஏற்படும் போக்குவரத்துச் செலவுக்கேற்ப போதிய இலாபமீட்டல் சாத்தியமற்றதாக இருப்பதால் அந்த முயற்சியை கைவிட்டுள்ளதாகவும் உற்பத்தியாளர் ஒருவர் குறிப்பிட்டதும் நோக்கத்தக்கது.

பாய் உற்பத்தி

சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கான உதவிகளை வழங்குதல் பெயரளவில் இருந்து வருவதாகவே நோக்க வேண்டியிருக்கின்றது.

ஒவ்வொரு ஆண்டும் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தியை முன்னைய ஆண்டுகளிலும் பார்க்க அதிகரிக்கும் வண்ணம் கண்காணித்து முன்கொண்டு செல்லவில்லை என்ற வலுவான குற்றச்சாட்டை சிறு கைத்தொழில் மாவட்ட திணைக்களம் எதிர்கொண்டாக வேண்டிய அவதானிப்புக்களை பெற முடிந்ததும் குறிப்பிடத்தக்கது.

பாய் உற்பத்தியின் தேவை பிராந்தியத்தில் அதிகளவில் இருந்த போதும் இத்தொழிலை செய்யக்கூடியவர்களும் அங்கு இருக்கின்ற போதும் அதற்கான மூலப்பொருட்களைப் பெற்றுக் கொடுப்பதில் இருக்கும் அக்கறையில்லாத போக்கு அத்தொழிலில் முயற்சியாளர்களை வேறு வருவாய்களை ஈட்டும் தொழில்முறைகளை நாடிச் செல்ல வைப்பதையும் கவனிக்க முடிகின்றது.இது ஆரோக்கியமான மாற்றங்களாக இருக்கப்போவதில்லை.

பனை மரங்கள் அதிகளவில் அழிக்கப்பட்டு வருவதோடு பிரப்பம் கொடிகள் அதிகம் வளரும் ஆற்றோரங்களும் மண் அகழ்வு மற்றும் விவசாயச் செய்கை போன்றவற்றால் பாரியளவிலான அழிப்பை எதிர்கொண்டு இருக்கின்றன.

அதிகளவான பாய் உற்பத்தியானது உள்நாட்டு தேவைக்குப் போக மீதமுள்ளவற்றை வெளிநாட்டு ஏற்றுமதிக்கு திட்டமிடக்கூடிய வருவாய் வழியினையும் கொண்டுள்ளதாக ஏற்றுமதித்துறையில் ஈடுபட்டு வருவோர் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.

பாதுகாக்கப்பட்டுமா பன்புல்நிலம் 

முல்லைத்தீவு நந்திக்கடலின் சுற்றாடலில் உள்ள கைத்தொழிலுக்கு பயனுடையதாக உள்ள இயற்கை வளங்களை அழித்தொழிக்கும் செயற்பாடுகளுக்கு தடையிடப்படல் வேண்டும்.

நெல்லை பயிரிட பன்புல் நிலங்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.பன்புல் நெல் போல் எல்லா இடங்களிலும் வளரவில்லை.அல்லது வளர்க்க முடியவில்லை என்ற யாதார்த்ததினை நெற்ச் செய்கையாளர்கள் உள்ளிட்ட கல்பன்புல் விளைநிலங்களை அழிக்கும் சாரார் கருத்தில் எடுக்க வேண்டும்.

இது தொடர்பில் துறைசார் அதிகாரிகள் மக்களிடையே மேற்கொள்ளும் விழிப்புணர்வு செயற்பாடுகள் மூலமும் உருவாக்கப்படும் கட்டுப்பாடுகள் மூலமும் பயனுடைய இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் சாத்தியப்பாடான சூழல் உருவாகும் என்பது திண்ணம்.

NO COMMENTS

Exit mobile version