யாழ்ப்பாணம் (Jaffna) – சுன்னாகத்தில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் பிராந்திய பொறியியல்
காரியாலயத்தில் இருந்து சூரிய சக்தி மூலமான மின்னிணைப்பு (Solar Power) அனுமதி வழங்கப்படுவதில்
முறைகேடுகள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சினையால், பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஜனாதிபதி
செயலகத்துக்குப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வீடுகள் மற்றும் கட்டடங்களின் கூரை மேல் பொருத்தப்படும் சூரிய சக்தி இணைப்புக்காக 42 கிலோ வாட்ஸ் வரையான இணைப்புக்களுக்கான அனுமதி சுன்னாகத்தில்
உள்ள இலங்கை மின்சார சபையின் பிராந்திய பொறியியல் காரியாலயத்தினாலேயே
வழங்கப்படுகின்றன.
முறையற்ற அனுமதிகள்
அவ் அனுமதிக்காக விண்ணப்பித்த பலரது விண்ணப்பங்கள்
வருடக்கணக்காகத் தேங்கிப் போயுள்ள நிலையில் குறுகிய காலத்தினுள்
சிலருக்கு முறையற்ற விதத்தில் அனுமதிகள் வழங்கப்படுகின்றமை
கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பலர் ஜனாதிபதியின்
குறைகேள் அதிகாரிக்கு முறைப்பாடு செய்துள்ளதானத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இது
தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் உட்பட உயரதிகாரிகளுக்கு
முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாததை
அடுத்தே ஜனாதிபதி செயலகத்துக்கு முறைப்பாடுகள் அனுப்பி வைக்கப்படுவதாக
அம்முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி
இந்த நிலையில், முறைப்பாடுகள் தொடர்பில், ஆராய்ந்து அறிக்கையிடுமாறு ஜனாதிபதியின்
செயலாளரினால் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கு
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், யாழ்ப்பாணத்தில் சூரிய சக்தி மின்னிணைப்புக்கான அனுமதி வழங்கல் தொடர்பில்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் மூவர் கொழும்பிலுள்ள
மின்சார சபையில் முன்வைத்த தகவல் கோரிக்கைகளுக்கு உரிய தகவல்கள் வழங்கப்படாத
காரணத்தினால், தகவல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும்
தெரியவருகிறது.