எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என அறிவித்தல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) இன்று (07) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
தண்டனைக்குரிய குற்றம்
இதன்படி, தேர்தலில் போட்டியிடுவதற்கு பெயர் குறித்த நியமனங்களைக் கையளிக்கும் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் பிரகடனம் செய்யப்பட்ட தினத்தில் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை உரிய தெரிவத்தாட்சி அலுவலரிடம் பெயர் குறித்த நியமனப்பத்திரங்களுடன் ஒப்படைக்க வேண்டும்.
பெயர் குறித்த நியமனப்பத்திரத்துடன் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்தாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
இதேவேளை தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, நியாயாதிக்க நிறுவனங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் நிர்வாக சபைக் கூட்டங்கள் இடைநிறுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
புதிய தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதானிகளை நியமிப்பது புதிய அமைச்சர்களின் கடமை என பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி சுட்டிக்காட்டினார்.