தங்கச்சிமடம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி
வைக்கப்பட்டிருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான 175 கிலோ ஏலக்காய் மூட்டைகளை இன்று
(30) அதிகாலை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதி இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் இந்திய
இலங்கை சர்வதேச கடல் எல்லை ஊடாக இலங்கைக்கு நாட்டுப்படகில் கஞ்சா, கடல் அட்டை,
பீடி இலை பண்டல்கள், ஏலக்காய், சுக்கு, செருப்பு, திமிங்கலம் துடுப்பு,
உள்ளிட்டவைகள் கடத்தப்பட்டு வருகிறது.
பொலிஸார் தீவிர விசாரணை
இந்நிலையில் தங்கச்சிமடம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு நாட்டுப்படகில்
ஏலக்காய், சுக்கு, வெளிநாட்டு சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் கடத்த இருப்பதாக
ராமநாதபுரம் ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த
தகவலின் அடிப்படையில் இன்று (30) திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.
இதன் போது அங்கிருந்த வீட்டில் இலங்கைக்கு படகில் கடத்திச் செல்வதற்காக 7
மூட்டைகளில் 175 கிலோ ஏலக்காய் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஏலக்காய் மூட்டைகளை பறிமுதல் செய்து தங்கச்சிமடம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வந்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இது தொடர்பாக தலைமறைவான வீட்டின் உரிமையாளரையும் பொலிஸார் தீவிரமாக தேடி
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
