Home இலங்கை சமூகம் தொழிற்சங்க நடவடிக்கையைக் கைவிட்ட இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம்

தொழிற்சங்க நடவடிக்கையைக் கைவிட்ட இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம்

0

இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் (SASA) திட்டமிட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான (Dinesh Gunawardena) கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

ஜூன் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவர்களது கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் மகேஷ் கம்மன்பில Mahesh Gammanpila) தெரிவித்துள்ளார்.

 

பிரதமருடன கலந்துரையாடல் 

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுப்புப் போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் திட்டமிட்டிருந்தது.

இதேவேளை, அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் பிரதிநிதிகளும் பிரதமருடன் தமது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காததால் செவ்வாய் (25) மற்றும் புதன்கிழமை (26) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்கப் போராட்டத்தைத் தொடரத் தீர்மானித்துள்ளதாக அரச நிர்வாக அலுவலர்கள் கூட்டுக் குழுவின் தலைவர் எச்.ஏ.எல். உதயசிறி (H.A.L. Udayasiri) தெரிவித்தார்.

இந்தப் பின்னணியில் கல்வித்துறையின் கல்விசாரா ஊழியர்கள் நேற்று (24) ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்கின்றனர்.

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள்

தமது கோரிக்கைகளுக்கு இதுவரை அதிகாரிகள் பதிலளிக்கவில்லை என கல்வி சாரா ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே. திலகரத்ன (Ajith K. Tilakaratne) தெரிவித்துள்ளார்.

மேலும், நாளை (26) நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் பங்கேற்கும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) அறிவித்துள்ளார்.

இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் மேலும் தொடரும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.

அவர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு தேசிய சம்பள ஆணைக்குழுவுடன் இன்று (25) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version