கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றுச் சுழற்சியானது மேற்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து தற்போது திருகோணமலையிலிருந்து 230 கிலோமீற்றர் கிழக்காக காணப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா (Nagamuthu Piratheeparajah) தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழுக்கு இன்று (11) வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த காற்றுச் சுழற்சியானது இன்று (11) நள்ளிரவு அல்லது நாளை (12) அதிகாலை வடக்கு மாகாணத்தின் ஊடாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காற்றுச் சுழற்சியின் நகர்வு
பொதுவாக வங்காள விரிகுடாவில் தோற்றம் பெறுகின்ற தாழமுக்கங்களின் வழமையான நகர்வுப் பாதைக்கு ஏற்ற வகையிலேயே இந்த காற்றுச் சுழற்சியின் நகர்வுப் பாதையும் காணப்படுகின்றது.
அந்த அடிப்படையில் இந்த காற்றுச் சுழற்சியின் நகர்வானது இன்று நள்ளிரவிலிருந்து நாளை அதிகாலை வரைக்கும் யாழ்ப்பாணம், கிளிநொச்சியை மையப்படுத்தியதாக மன்னார் வளைகுடாவைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிட்டத்தட்ட 230 கிலோமீற்றர் விட்டம் கொண்ட இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது இன்றிரவு கரையை கடக்கின்ற போது அதனுடைய மையப்பகுதி கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் காணப்பட்டாலும் கூட அதனுடைய உள் மற்றும் வெளி வளையங்கள் வடக்கு மாகாணத்தினுடைய பெரும்பாலான மாவட்டங்களை உள்ளடக்கியதாக நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடல் அலைகள்
இந்த காற்றுச் சுழற்சியின் நகர்ச்சியின் ஒரு தொடர்ச்சியாக இந்த காற்றுச்சுழற்சி திருகோணமலை கடற்கரைக்கு அல்லது திருகோணமலைக்கு மிக அண்மித்தே வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நேற்று (10) தொடங்கிய மழையானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிரவரும் 13ஆம் திகதி வரை நீடிப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
அத்துடன் கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுவதுடன் வழமையை விட அலைகளின் உயரம் சராசரியாக 2மீற்றர் உயரமாக காணப்பட வாய்ப்புள்ள நிலையில் கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம்.
இலங்கைக்கு வடக்காக எதிர்வுரம் 14 ஆம் திகதி மீண்டும் ஒரு காற்றுச்சுழற்சி எற்பட வாய்ப்புள்ளது.
இது ஒரு சிறியளவிலான புயலாக வலுப்பெறுவதற்கான கடல் நிலைமைகள் காணப்படுகின்றது.“ என தெரிவித்தார்.
https://www.youtube.com/embed/sR6Uncp9IVU