Home இலங்கை அரசியல் விலங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து முன்னாள் அமைச்சர் தகவல்

விலங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து முன்னாள் அமைச்சர் தகவல்

0

Courtesy: Sivaa Mayuri

தமது நிலங்களை பாதுகாப்பதற்காக, அவுஸ்திரேலிய அரசாங்கம் மில்லியன் கணக்கான கங்காருக்களை, அண்மையில் கொன்றிருப்பதாக விவசாயத்துறை முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.

எனினும், இலங்கையில் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிடப்படுவதால், பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் விலங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகளை, அரசாங்கம் பரிசீலிக்கலாம் என்று மஹிந்த அமரவீர பரிந்துரைத்துள்ளார்.

பயிர்களுக்கு ஏற்படும் சேதம்

சில சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் நடத்தப்படும் திட்டமிடப்பட்ட ஊடக காட்சிகளில் கவனம் செலுத்துவதை விட, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என்று அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

 

சீனாவுடன் மூன்று கலந்துரையாடல்களுக்குப் பிறகு, அவர்கள் தங்கள் தனிப்பட்ட உயிரியல் பூங்காக்களுக்காக இலங்கையின் 100,000 டோக் மக்காக்களை கோரினர்.

திட்டம் தொடர்பான ஆவணங்கள் பரிமாறப்பட்டன. இருப்பினும், திட்டம் தொடங்கும் போது, ​​பல சுற்றுச்சூழல் அமைப்புகள் அதற்கு எதிராக செயற்பட்டன.

இதன் விளைவாக, அந்த திட்டத்தை தொடர முடியவில்லை” என்று முன்னாள் அமைச்சர் கூறினார்.

தற்போதைய ஜனாதிபதி சீனாவிற்கு விஜயம் செய்ய உள்ளார், அங்கு அவர் இது தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க முடியும். இந்த பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து, பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை குறைக்க சீனா மற்றும் பிற நாடுகளுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்யலாம்.

அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விவசாயிகள்

இந்த முயற்சியானது தூதரக உறவுகளை வலுப்படுத்தலாம். அத்துடன் இந்த விலங்குகளால் ஏற்படும் அச்சுறுத்தலை நிவர்த்தி செய்யலாம் என்றும் அவர் கூறினார்.

டோக் மக்காக்கள், குரங்குகள், முள்ளம்பன்றிகள், மயில்கள் மற்றும் இராட்சத அணில்கள் பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றாலும், இந்த விலங்குகள் சீனா போன்ற நாடுகளில் மதிப்புமிக்கதாகக் கருதப்படுகின்றன.

உதாரணமாக, தெஹிவளை மிருகக்காட்சிசாலையில், கங்காருக்களைப் பார்த்து மகிழ்கிறோம், ஆனால் அவுஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ சின்னமாக கங்காரு அங்கீகரிக்கப்பட்ட போதிலும், அந்த நாடு அண்மையில் மில்லியன் கணக்கான கங்காருக்களை அழித்துள்ளது.

இந்த நிலையில்,விலங்குகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விவசாயிகளின் கிராமங்களில் நேரத்தை செலவிடுமாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்களை முன்னாள் அமைச்சர் வலியுறுத்தினார்.

அவர்களின் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டால், குறித்த விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை கைவிட்டு நகர்ப்புறங்களுக்குச் சென்று, முச்சக்கர வண்டிகளை ஓட்டுவது போன்ற வேலைகளிலேயே ஈடுபடுவார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் எச்சரித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version