Home இலங்கை பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையில் நாட்டின் பொருளாதாரம்! ​ரோஹிணி கவிரத்ன அறிக்கை

வீழ்ச்சிப் பாதையில் நாட்டின் பொருளாதாரம்! ​ரோஹிணி கவிரத்ன அறிக்கை

0

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன (Rohini Kaviratne) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை அவர் ஊடக அறிக்கையொன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடக அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் பொருளாதாரம் மெதுவாக, ஆனால் உறுதியாக மீண்டுமொரு தடவை வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.

அந்நிய செலாவணிக் கையிருப்பு

இலங்கையின் நடைமுறைச் சேமிப்பு 2024ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 432 மில்லியன் டொலர்கள் மேலதிக நிதியைக் கொண்டிருந்தது.அது மூன்றாம் காலாண்டில் 303 மில்லியன் டொலர்களாக 129 மில்லியன் டொலர்களால் வீழ்ச்சியடைந்துள்ளது.

அரச நிர்வாகத்தின் பலவீனங்கள் மற்றும் பொருளாதார விவகாரங்களைக் கையாளுவதில் பிழையான அணுகுமுறைகள் காரணமாகவே இவ்வாறான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) நாட்டின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற போது, இலங்கையின் அந்நிய செலாவணிக் கையிருப்பு 6,472 பில்லியன் டொலர்களாக இருந்தது.

நவம்பர் மாதத்தில் அது 6,451 பில்லியன் டொலர்களாக 21 பில்லியன் டொலர்களாலும், டிசம்பரில் 6,091 டொலர்களாக 360 பில்லியன் டொலர்களாலும் வீழ்ச்சியுற்றுள்ளது. மூன்று மாத காலப் பகுதிக்குள் மொத்தம் 381 பில்லியன் டொலர்கள் வீழ்ச்சியுற்றுள்ளது.

பொருளாதார வீழ்ச்சி

கடந்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட கடன் வழங்குனர்களுக்கு கொடுக்க வேண்டிய கடன் மற்றும் வட்டித் தொகைகளையும் உரிய முறையில் செலுத்தியதுடன், தொடர்ச்சியாக அந்நிய செலாவணிக் கையிருப்பை நேர்மறை விகித வளர்ச்சியில் பேணிக் கொண்டிருந்தது.

ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதல் 100 நாட்களுக்குள்ளாகவே அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு, வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது.

அந்த வகையில் நாடு பொருளாதார வீழ்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் அதன் தாக்கங்களை உணரக் கூடியதாக இருக்கும் என்றும் ரோஹிணி கவிரத்ன தொடர்ந்தும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version