Courtesy: Gunadharshan Baskaran
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்த கட்சி தாவல்கள் என்பது தற்போது தீவிரமடைந்துள்ளமையினால் உள்ளக கட்சி ரீதியிலான பிளவுகள் வலுப்பெற்று வருவதை காணமுடிகிறது.
இதற்கமைய, ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கம் அரசியலின் கண்ணோட்டம் திரும்பியுள்ளது.
இந்தநிலையில், நேற்றையதினம் (19) முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவருமான மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara ), ஐக்கிய மக்கள் சக்தியின் மேலும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் (Ranil Wickramasinghe) இணைந்து கொள்வார்கள் என பகிரங்கப்படுத்தியிருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர்
இந்த விடயமானது சஜித் தரப்புக்கு பின்னடைவாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தற்போதைய பொதுச் செயலாளரான ரஞ்சித் மத்தும பண்டாரவின் (Ranjith Mathuma Bandara) கட்சி ரீதியிலான பதவியில் மாற்றம் செய்ய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) முயற்சிப்பதாக சில அரசியல் கருத்தாடல்கள் உள்ளக வட்டாரங்களின் மூலம் வெளிவந்துள்ளன.
அத்தோடு, கட்சிக்குள் சில தலைவர்களை மட்டும் சஜித் வழிநடத்துவதும் இவை கட்சி ரீதியில் பிளவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவுவதாகவும் அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றன.
உட்கட்சி பிரச்சினை
அவருக்கு வழங்கப்பட்டுள்ள பதவியை சுதந்திர மக்கள் பேரவையைச் சேர்ந்த ஜி.எல்.பிரிஸிடம் வழங்குவது தொடர்பில் இன்னும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Athanayake), கபீர் ஹாசிம் (Kabir Hashim), தலதா அத்துகோரள (Talatha Athukorala) மற்றும் ஹர்ஷ டி சில்வா (
Harsha de Silva) போன்ற தலைவர்களும் ஐக்கிய மக்கள் சக்தியை கட்டியெழுப்புவதற்கு ஆரம்பம் முதலே முயற்சித்து வரும் நிலையில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து விசனங்களும் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த உட்கட்சி பிரச்சினையை ரணில் தரப்பும் உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இதனை அடிப்படையாக கொண்ட கட்சி தாவல் கருத்தை மனுஷ வெளிப்படுத்தியுள்ளாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.