சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் ரி 56 ரக துப்பாக்கி மற்றும் அதற்குரிய ரவைகளுடன் காணாமற்போயுள்ளதாக வரக்காபொல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலையில்(trincomale) உள்ள கடற்படைத் தளத்திற்குச் சொந்தமான பொருட்களை கடற்படை பாரவூர்தியில் ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தவேளையே இவர் காணாமற்போயுள்ளதாக தெரியவருகிறது.
பாரவூர்தியின் பாதுகாப்பிற்கு சென்றவர்
குறித்த சிப்பாய் திருகோணமலை கடற்படை முகாமில் பணிபுரிபவர் என தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி பாரவூர்திக்கு பாதுகாப்பு வழங்கி வந்த இவர் நேற்று திங்கட்கிழமை (24) இரவு கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்தவேளை, வரக்காபொல வாரயகொட பகுதியில், தனது சகோதரர் வீட்டில் இருந்து இரவு உணவு கொண்டு வருவதாக கூறி பாரவூர்தியில் இருந்து இறங்கிசென்ற நிலையில், அவர் திரும்பி வரவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினர் விசாரணை
கடற்படை சிப்பாய் திரும்பி வராத நிலையில், வாகனத்தின் சாரதியாக இருந்த கடற்படை வீரர் சம்பவம் தொடர்பில் வரக்காபொல காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.