ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய
மக்கள் சக்தி அரசு தேசியத்துக்கு முன்னுரிமை வழங்கிச் செயற்படாது. மதக்
கொள்கையற்ற வகையில் புதிய அரசமைப்பை உருவாக்கும் நிலைப்பாட்டில் இந்த அரசு
உள்ளது. எனவே, தேசியத்தைப் பாதுகாப்பதற்காகச் செயற்பாட்டு ரீதியிலான அரசியலில்
ஈடுபட நாம் ஈடுபடவுள்ளோம் என்று தேமுன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் விமல் வீரவன்ச(Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் புதிய தலைமைக் காரியாலயம் நேற்று(19) பத்தரமுல்லை பகுதியில் பௌத்த மத வழிபாடுகளுடன் திறந்து வைக்கப்பட்டது.
இதனைத்
தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.
தேசியத்துக்கு முன்னுரிமை
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகளை
எதிர்கொண்டுள்ளது. அத்துடன் அரசின் ஒருசில செயற்பாடுகளால் நாட்டின் சுயாதீனம்
கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. நாட்டின் தேசியம் தொடர்பில் அரசு கவனத்தில்
கொள்ளவில்லை.
தேசியத்துக்கு முன்னுரிமை வழங்கி இந்த அரசு செயற்படாது. புதிய அரசமைப்பு
உருவாக்கம் குறித்து தற்போது பேசப்படுகின்றது.
இலங்கையைச் மதச் சார்பற்ற நாடாக மாற்றியமைக்கும் வகையில் புதிய அரசமைப்பை
உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தவர்கள் இந்த அரசில் முன்னிலை
பதவிகளில் உள்ளார்கள்.
அரசும் அந்த நிலைப்பாட்டில்தான் உள்ளது.
புதிய மாற்றத்துக்காக மக்கள் புதியவர்களைத் தெரிவு செய்தார்கள். புதியவர்கள்
மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றி எவ்விடத்திலும் பேசுவதில்லை.
ஆகவே,
புதியவர்களைத் தெரிவு செய்ததன் பிரதி பலனை மக்கள் தற்போது
பெற்றுக்கொண்டுள்ளார்கள்.
அதிகாரத்தில் இருக்கும் போதும், இல்லாத போதும் மக்களின்
பிரச்சினைகளுக்காகவும், உரிமைகளுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம்.
தேசியத்தைப் பாதுகாத்தால் மாத்திரமே இலங்கை என்ற அடிப்படையில் முன்னேற்றமடைய
முடியும்.
தேசியத்தைப் பாதுகாப்பதற்காகச் செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் நாம்
ஈடுபடவுள்ளோம். கடந்த காலங்களைக் காட்டிலும் இனி உத்வேகத்துடன் செயற்படுவோம்.
தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு
முரணாகத் தற்போது செயற்படுகின்றது. ஆகவே, இந்த அரசுக்குக் கடந்த காலத்தை
நினைவுபடுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.